< Back
கிரிக்கெட்
3-வது ஒருநாள் கிரிக்கெட்; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை..!

image courtesy; twitter/@ICC

கிரிக்கெட்

3-வது ஒருநாள் கிரிக்கெட்; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை..!

தினத்தந்தி
|
12 Jan 2024 6:46 AM IST

இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

கொழும்பு,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து 27 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவின் சுழலில் சிக்கினர். 22.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 96 ரன்களில் சுருண்டது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 7 விக்கெட்டுகளை அள்ளினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் 5-வது சிறந்த பந்து வீச்சாக இது பதிவானது.

பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் குசல் மென்டிஸ் அரைசதம் (66 ரன்) அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


மேலும் செய்திகள்