நிக்கோலஸ் பூரன் அபார சதம்...நெதர்லாந்து அணிக்கு 375 ரன்கள் இலக்கு...!!!
|நெதர்லாந்து அணிக்கு 375 ரன்களை இலக்காக நிர்ணயித்தது, வெஸ்ட் இண்டீஸ் .
ஹராரே,
ஜிம்பாப்வேயில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நெதர்லாந்து அணிகள் மோதின.
போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிங் மற்றும் சார்லஸ் களமிறங்கினர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டனர்.
சிறப்பான ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் குவித்தது. இருவரும் அரை சதம் விளாசினர். பின்னர் சார்லஸ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமர் ப்ரூக்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். அதன்பிறகு சிறிது நேரத்திலேயே கிங் 76 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து களம் இறங்கிய பூரன், ஹோப் உடன் ஜோடி சேர்ந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இவர்கள் ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்தது. ஹோப் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷெப்பர்ட் 0 ரன்னிலும், ஹோல்டர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். பூரன் 104 ரன்களிலும் (65 பந்துகள்), கீமோ பால் 46 ரன்களிலும்(25 பந்துகள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே, சாகிப் சுல்பிகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.