< Back
கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக நம்பர் ஒன் இடத்தை பிடிக்க 3 அணிகள் போட்டி
கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்க 3 அணிகள் போட்டி

தினத்தந்தி
|
13 Sept 2023 4:30 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க 3 அணிகள் வரிந்து கட்டுகின்றன.

துபாய்,

கிரிக்கெட் தரவரிசை

10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்துடன் நுழையப்போகும் அணி எது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (121 புள்ளி), பாகிஸ்தான் (118), இந்தியா (115), நியூசிலாந்து (106), இங்கிலாந்து (99) ஆகிய அணிகள் உள்ளன. இதில் முன்னாள் உலக சாம்பியன்களான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா இடையேத் தான் 'நம்பர் ஒன்' இடத்திற்கு நேரடி போட்டி நிலவுகிறது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய 3 ஒரு நாள் போட்டிகளில் 2-ல் தோற்றால் 'நம்பர் ஒன்' இடத்தை இழந்து விடும். அதன் பிறகு அந்த அணி உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளில் (செப்.22-ந்தேதி மொகாலி, 24-ந்தேதி இந்தூர் மற்றும் 27-ந்தேதி ராஜ்கோட்) விளையாடுகிறது. இந்த தொடரை முழுமையாக வென்றால் மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியா எப்படி?

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணிக்கு அதில் தொடர்ந்து சாதகமான முடிவுகள் கிடைக்க வேண்டும். மேலும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் உலகக் கோப்பை போட்டிக்கு 'நம்பர் ஒன்' அணியாக கம்பீரமாக பயணிக்க முடியும்.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் அதையும் சேர்த்து இன்னும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். இரண்டிலும் வெற்றி பெற்றால் அந்த அணி முதலிடத்தை அடையும். ஆனால் அந்த இடத்தை தக்கவைப்பது கடினம். ஏனெனில் அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எந்த தொடரும் இல்லை. நேரடியாக உலகக் கோப்பை போட்டியில் தான் கால்பதிக்கிறது. ஒரு வேளை ஆசிய கோப்பையை வென்று, அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சில புள்ளிகளை இழக்கும் நிலை ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து தரவரிசையில் 'நம்பர் ஒன்' அணியாக நுழைந்து மகுடம் சூடியது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்