வங்காளதேசத்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து 3 வீரர்கள் விடுவிப்பு.. காரணம் என்ன..?
|வங்காளதேசம் - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
மும்பை,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்காளதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும்.
பின்னர் 52 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 4-வது நாள் முடிவில் 26 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சர்பராஸ்கான், துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.
இதற்கான காரணம் குறித்து பி.சி.சி.ஐ. கூறுகையில், "சர்பராஸ் கான், துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் நாளை தொடங்க உள்ள இரானி கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். அதனால் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.