தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடியதன் மூலம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார்
மான்செஸ்டர்,
இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவர்களில் 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ககிசோ ரபடா 36 ரன்களும், கீகன் பீட்டர்சன், கைல் வெரைன் தலா 21 ரன்னும் எடுத்தனர்.
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 40 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் களம் இறங்கியதன் மூலம் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஆண்டர்சன் விளையாடும் 174-வது டெஸ்ட் இதுவாகும். அதே சமயம் சொந்த மண்ணில் ஆடும் 100-வது டெஸ்டாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் 100 டெஸ்டுகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மொத்தத்தில் 200 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். ஆனால், அவர் இந்திய மண்ணில் 94 டெஸ்டுகளும், வெளிநாடுகளில் 06 டெஸ்டுகளும் ஆடி உள்ளார் என்பது குற்ப்பிடத்தக்கது.