இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; ஜடேஜா ஆடுவது சந்தேகம்...?
|இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
விசாகப்பட்டினம்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் 231 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 202 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியின்போது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு காரணமாக ஜடேஜா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக அவர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இரு இன்னிங்சையும் சேர்த்து 89 ரன் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.