ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இன்று 3-வது நாள் ஆட்டம்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்கார் உஸ்மான் கவாஜா 81 ரன்னும், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆட்டம் இழக்காமல் 72 ரன்னும் சேர்த்தனர். இந்தியா தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 13 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
புஜாரா டக்-அவுட்
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடர்ந்து ஆடினர். ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக நாதன் லயன் கடும் குடைச்சல் கொடுத்தார். நிதானமாக ஆடிய லோகேஷ் ராகுல் (17 ரன்) நாதன் லயன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவரின் இந்த முடிவை எதிர்த்து அவர் செய்த அப்பீலுக்கு பலன் கிடைக்கவில்லை. அடுத்து புஜாரா களம் இறங்கினார்.
நாதன் லயன் ஒரே ஓவரில் இரட்டை 'செக்' வைத்தார். நன்றாக ஆடி வந்த கேப்டன் ரோகித் சர்மா (32 ரன்கள், 69 பந்து, 2 பவுண்டரி) அவரது பந்து வீச்சில் முன்னால் இறங்கி ஆடுவதற்கு பதிலாக பின்னங் காலில் ஆடினார். ஆனால் பந்து அவரை ஏமாற்றி விட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. 100-வது டெஸ்டில் ஆடும் புஜாரா டக்-அவுட் ஆகி பெருத்த ஏமாற்றம் அளித்தார். அவருக்கு எதிராக லயன் எல்.பி.டபிள்யூ. கேட்டு எழுப்பிய குரலுக்கு நடுவர் செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து அவர் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்து சாதகமான முடிவை பெற்றார்.
விராட்கோலி 44 ரன்
இதனை அடுத்து விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் (4 ரன்) நிலைக்கவில்லை. அவர் அடித்த பந்தை ஷாட் லெக்கில் நின்ற ஹேன்ட்ஸ்கோம்ப் அபாரமாக கேட்ச் செய்தார். இதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, விராட்கோலியுடன் கைகோர்த்தார். இருவரும் அவ்வப்போது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஸ்கோர் 125 ரன்னை எட்டிய போது ரவீந்திர ஜடேஜா 26 ரன்னில் சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். இதனை எதிர்த்து அவர் செய்த அப்பீல் வீணானது. அடுத்த 2 ஓவர்களில் விராட்கோலி (44 ரன்கள், 84 பந்து, 4 பவுண்டரி) அறிமுக சுழற்பந்து வீச்சாளர் குனேமேன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அவர் டெஸ்ட் போட்டியில் கைப்பற்றிய முதல் விக்கெட் இதுவாகும். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் (6 ரன்) வந்த வேகத்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
அக்ஷர் பட்டேல் அபாரம்
இதனை அடுத்து அஸ்வின், அக்ஷர் பட்டேலுடன் இணைந்தார். இருவரும் நிலைமையை உணர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க வைத்தனர். அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஷர் பட்டேல் குனேமேன் பந்து வீச்சில் 2-வது சிக்சரை அடிக்கையில் தனது அரைசதத்தையும் கடந்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும்.
81-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது. அந்த ஓவரில் 2-வது பந்தில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அஸ்வின் (37 ரன்கள்) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 8-வது விக்கெட்டுக்கு அக்ஷர் பட்டேல்-அஸ்வின் இணை 114 ரன்கள் சேர்த்தது. நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட முதல் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் இதுவாகும். அடுத்த ஓவரில் டாட் மர்பி பந்து வீச்சில் சிக்சர் விளாசிய அக்ஷர் பட்டேல் (74 ரன்கள், 115 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) அதே ஓவரில் கடைசி பந்தில் கம்மின்ஸ்சின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த முகமது ஷமி (2 ரன்) குனேமேன் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
இந்தியா 262 ரன்கள்
இந்திய அணி முதல் இன்னிங்சில் 83.3 ஓவர்களில் 262 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன் 5 விக்கெட்டும், குனேமேன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.
ஒரு ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 6 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டிராவிஸ் ஹெட் 39 ரன்னுடனும், மார்னஸ் லபுஸ்சேன் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
3-வது நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
இந்தியாவுக்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய லயன்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நேற்று 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியாவுக்கு எதிராக 24-வது டெஸ்டில் ஆடும் அவரது விக்கெட் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 139 விக்கெட்டுகளும், இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் 105 விக்கெட்டுகளும் வீழ்த்தி முறையே முதல் 2 இடங்களில் உள்ளனர்.
விராட் கோலி அதிருப்தி
விராட் கோலி எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் என கள நடுவர் அறிவித்த முடிவை எதிர்த்து அப்பீல் செய்ததில் 3-வது நடுவர் அவுட்டை உறுதி செய்தார். ஆனால் டெலிவிஷன் ரீபிளேயில் மற்றொரு கோணத்தில் பந்து பேட்டில் முதலில் படுவது போல் தெரிந்ததால் விராட் கோலி உடைமாற்றும் அறையில் சக வீரர்களிடம் நடுவர் முடிவு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.