2-வது டெஸ்ட்: ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாக மாற்று வீரர் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு
|இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த முதலாவது டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாக மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லன் பென்னிங்டன், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.