2வது டெஸ்ட்; ரூட், அட்கின்சன் அபார சதம்... முதல் இன்னிங்சில் 427 ரன்கள் குவித்த இங்கிலாந்து
|இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன், கஸ் அட்கின்சம் 118 ரன் எடுத்தனர்.
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ, மிலன் ரத்னாயகே மற்றும் லஹிரு குமரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய அட்கின்சன் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 427 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன், கஸ் அட்கின்சம் 118 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்ணாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.