< Back
கிரிக்கெட்
2வது டெஸ்ட்; ஆஸ்திரேலியாவுக்கு 279 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து

Image Courtesy: AFP

கிரிக்கெட்

2வது டெஸ்ட்; ஆஸ்திரேலியாவுக்கு 279 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து

தினத்தந்தி
|
10 March 2024 9:23 AM IST

279 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி ஆடி வருகிறது.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 172 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

வெறும் 45.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் டாம் லதாம் 38 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட், ஸ்டார்க் 3 விக்கெட், கேமரூன் க்ரீன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 68 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 256 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக லபுஸ்சாக்னே 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேட் ஹென்றி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 94 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து 40 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. நியூசிலாந்து தரப்பில் லதாம் 65 ரன்னுடனும், ரவீந்திரா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய நியூசிலாந்து 108.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 372 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திரா 82 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி ஆடி வருகிறது.

மேலும் செய்திகள்