2வது டெஸ்ட் போட்டி; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா..!
|இந்த போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மெல்போர்ன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 318 ரன்னும், பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 264 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 262 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 317 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்த போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது.