< Back
கிரிக்கெட்
2-வது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 288/4
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 288/4

தினத்தந்தி
|
21 July 2023 3:56 AM IST

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் லேசான காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக அறிமுக பவுலராக முகேஷ் குமார் இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரேமன் ரீபருக்கு பதிலாக புதுமுக வீரர் கிர்க் மெககென்சி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.



வலுவான தொடக்கம்

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். சில ஓவர்கள் நிதானத்தை கடைபிடித்த ரோகித் சர்மா 5-வது ஓவரில் சிக்சருடன் ரன்வேட்டையை ஆரம்பித்தார். அடுத்த ஓவரில் ஜெய்வாலும் ஒரு சிக்சர் பறக்க விட்டார். அதன் பிறகு ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தியடித்தனர். இதனால் ரன்ரேட்டுக்கு 4-க்கு மேலாக சென்றது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சிக்சருடன் அரைசதத்தை கடந்தார். சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வாலும் அரைசதத்தை எட்டினார். மதிய உணவு இடைவேளை வரை இந்த கூட்டணியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இவர்கள் ஸ்கோர் 139 ஆக உயர்ந்த போது பிரிந்தனர். ஜெய்ஸ்வால் 57 ரன்களில் (74 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில் (10 ரன்) நிலைக்கவில்லை. சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மாவும் (80 ரன், 143 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.

அடுத்ததாக விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ரகானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் விராட் கோலி தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.



இந்த போட்டி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 100-வது டெஸ்டாகும். இதையொட்டி போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் கிஷோர் ஷலோ, முன்னாள் வீரர் பிரையன் லாரா ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கிய காட்சி.

மேலும் செய்திகள்