2வது டெஸ்ட்: கவெம் ஹாட்ஜ் சதம்...2ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 351/5
|வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கவெம் ஹாட்ஜ் 120 ரன்கள் அடித்தார்.
நாட்டிங்ஹாம்,
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக போப் 121 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிராத்வைட் 48 ரன், மிகைல் லூயிஸ் 21 ரன் அடுத்து வந்த கிர்க் மெக்கென்சி 11 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து கவெம் ஹாட்ஜ் மற்றும் அலிக் அத்தானாஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர். இதில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிக் அத்தானாஸ் 82 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜேசன் ஹோல்டர் களம் இறங்கினார்.
மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவெம் ஹாட்ஜ் சதம் அடித்து அசத்தினார். அவர் 120 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஜோசுவா டா சில்வா களம் இறங்கினார். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 84 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.
ஜேசன் ஹோல்டர் 23 ரன்னுடனும், ஜோசுவா டா சில்வா 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 65 ரன்கள் பின்னிலையில் உள்ளது. 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.