வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்; 6 சாதனைகளை படைக்க அஸ்வினுக்கு வாய்ப்பு
|இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.
புதுடெல்லி,
இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் முதல் இன்னிங்சில் 113 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகள் படைத்தார். இந்நிலையில் வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுதினம் (செப்டம்பர் 27) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. அந்த 6 சாதனைகள் குறித்து இங்கே பார்ப்போம்...
1. டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர்:
டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் (99 விக்கெட்) தற்போது வைத்துள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 4-வது இன்னிங்சில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். ஒட்டுமொத்தமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 6-வது வீரர் ஆவார்.
2. இந்தியா vs பங்களாதேஷ் டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்:
இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். இந்த பட்டியலில் ஜாகீர்கான் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 29 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
3. 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் எடுத்த வீரர்:
2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 51 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 48 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
4. டெஸ்ட் கிரிக்கெட் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியல்:
டெஸ்ட் கிரிக்கெட் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் அஸ்வின் (37 முறை) 2-வது இடத்தில் ஷேன் வார்னே (37 முறை) உடன் உள்ளார். கான்பூர் டெஸ்டில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தினால் இந்த பட்டியலில் 2-வது இடத்தை தக்கவைப்பார். ஷேன் வார்னே 3வது இடத்திற்கு வருவார்.
5. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 7-வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. தற்போது 522 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அஸ்வின் இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார். அஸ்வின் கான்பூர் டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினால் 7-வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
6. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்:
ஒட்டுமொத்தமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் சாதனை படைக்க வாய்ப்புள்ளது. இந்தப்பட்டியலில் அஸ்வின் 180 விக்கெட் வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார். நாதன் லயன் 187 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால் நாதன் லயன் சாதனையை முறியடிக்க முடியும்.