2-வது டி20 போட்டி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
|இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
பாசட்டரே,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் அணி வீரர்களின் பொருட்கள் அடங்கிய 'லக்கேஜ்' மைதானத்திற்கு வந்து சேர தாமதம் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ரோகித் சர்மா முதல் பந்திலே கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 11 (6) ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 10 (11) ரன்களும், ரிஷப் பண்ட் 24 (12) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 31 (31) ரன்களும், ஜடேஜா 27 (30) ரன்களும், தினேஷ் கார்த்திக் 7 ரன்களும், அஷ்வின் 10 ரன்களும், புவனேஷ்வர் குமார் 1 ரன்னும், அவேஷ் கான் 8 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் 19.4 ஒவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஒபேட் மெக்காய் 6 விக்கெட்டுகளும், ஹொல்டர் 2 விக்கெட்டுகளும், ஜோசப் மற்றும் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்ல் மேயர்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நிகோலஸ் பூரன் 14 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 6 ரன்களில் ஜடேஜாவிடன் கேட்ச் ஆகி வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய பிராண்டன் கிங்ஸ் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 68 (52) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரோவ்மேன் பவல் 5 ரன்களில் வெளியேறினார்.
முடிவில் அதிரடி காட்டிய தேவான் தாமஸ் 31 (19) ரன்களும், ஒடேன் சுமித் 4 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, அஷ்வின், ஹர்திக் பாண்ட்யா, அவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.