தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
|தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் கவுகாத்தியில் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் இந்திய அணி களம் இறங்குகிறது.
கவுகாத்தி,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடரில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் ஆகியோர் அபாரமாக பந்து வீசி 9 ரன்னுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்து எதிரணியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தனர். அவர்களுக்கு பக்கபலமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், அக்ஷர் பட்டேல் ஆகியோரும் கட்டுக்கோப்பாக பந்து வீசி கலக்கினர்.
106 ரன்னில் தென்ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்திய இந்திய அணி இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் ரோகித் சர்மா (0), விராட்கோலி (3 ரன்) ஏமாற்றம் அளித்தாலும், நிதானமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (51 ரன்கள்), அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் (50 ரன்கள்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் இந்திய அணி சிரமமின்றி இலக்கை அடைந்தது.
கடந்த ஆட்டத்தில் கண்ட வெற்றி உற்சாகத்துடன் களம் இறங்கும் இந்திய அணி சொந்த மண்ணில் இதுவரை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை. இந்த நிலைமையை மாற்றி அந்த அணிக்கு எதிராக முதல்முறையாக 20 தொடரை கைப்பற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
தென்ஆப்பிரிக்க அணி முந்தைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் பவுமா, குயின்டான் டி காக், ரோசவ், மார்க்ராம், டேவிட் மில்லர் என்று திறமையான வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் மிரட்டல் அளிக்கக்கூடியவர்கள்.
இந்த ஆட்டத்தில் தோற்றால் தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்து விடும். எனவே அந்த அணியினர் பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க கடுமையாக போராடுவார்கள். அதேநேரத்தில் இந்திய அணி தொடரை வெல்ல வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.