ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20: 72 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி
|ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல்அவுட்டானது.
தம்புள்ளா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. குறிப்பாக சமரவிக்ரம - மேத்யூஸ் ஜோடி அதிரடியில் வெளுத்து வாங்கியது. சிறப்பாக விளையாடிய சமரவிக்ரம அரைசதம் அடித்து அசத்தினார். மேத்யூஸ் தனது பங்குக்கு ஹாட்ரிக் சிக்சர் உட்பட 42 ரன்கள் குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 187 ரன்கள் குவித்தது. இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஸ்ரத்துல்லா 1 ரன்னிலும் இப்ராஹிம் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அதிகபட்சமாக முகமது நபி 27 ரன்களும் கரிம் ஜனட் 28 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல்அவுட்டானது. இதையடுத்து இலங்கை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.