
Image Courtesy: @OfficialSLC
2வது டி20 போட்டி; எர்வின் அபார ஆட்டம்...இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி...!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
கொழும்பு,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி அசலங்கா மற்றும் மேத்யூஸ் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் எர்வின் மற்றும் டினாஷே கமுன்ஹுகம்வே களம் இறங்கினர். இதில் கமுன்ஹுகம்வே 17 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய பென்னட் 25 ரன், ராசா 8 ரன், வில்லியம்ஸ் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய எர்வின் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.