2வது டி20 போட்டி; ரஷித் கான் அபார பந்துவீச்சு...அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி
|ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் வென்றது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 59 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் அயர்லாந்து அணி களம் இறங்கியது.
அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பால்பிர்னி 45 ரன், ஸ்டிர்லிங் 24 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய டக்கர் 10 ரன், டெக்டர் 0 ரன், கர்டிஸ் கேம்பர் 6 ரன், டாக்ரெல் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.