< Back
கிரிக்கெட்
2-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Image Courtesy: AFP   

கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
8 Sept 2022 1:57 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் அடித்துள்ளது.

கெய்ர்ன்ஸ்,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக பின்ச், வார்னர் ஆகியோர் களம் இறங்கினர். கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்து பந்துவீச்சு அபாரமாக இருந்து.

ஆஸ்திரேலிய அணி ரன் கணக்கை தொடங்கும் முன்பே அந்த அணியின் கேப்டன் பின்ச் டக்-அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டகாரர் வார்னர் 5 ரன்னிலும், மார்னஸ் லபுஸ்சேன் 5 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது.

இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஆடிய அலெக்ஸ் கேரி 12 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 25 ரன், சீன் அப்போட் 7 ரன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் அரைசதம் அடித்தார். இந்நிலையில், அணியின் ஸ்கோர் 117 ரன்களாக இருந்த போது ஸ்மித் 61 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 38 ரன்னுடனும், ஹேஸ்லேவுட் 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 4 விக்கெட்டும், ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுதி, சாண்ட்னர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்