2-வது ஒருநாள் போட்டி ; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
|இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
சிட்னி,
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் அப்போட் 69 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். 43.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கீசி கார்ட்டி 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோஷ் ஹெசில்வுட் மற்றும் சீன் அப்போட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.