2வது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி...!
|இங்கிலாந்து அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
சிட்னி,
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 94 ரன்களும், லபுஷேன், மார்ஷ் அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ரஷித் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ராய் ரன் எடுக்காமலும், சால்ட் 23 ரன்னிலும், அடுத்து வந்த மலான் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த வின்ஸ். பில்லிங்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் வின்ஸ் 60 ரன்னிலும், பில்லிங்ஸ் 71 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து களம் புகுந்த மொயீன் அலி 10 ரன்னிலும், வோக்ஸ் 7 ரன்னுலும், சாம் கரன் ரன் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி 38.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 20 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.