டி20 உலகக்கோப்பை; குல்தீப், சாஹல் அல்ல...இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக இவர்தான் ஆட வேண்டும் - கவாஸ்கர்
|2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
மும்பை,
2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் குறித்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டடது. அதன்படி தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நமீபியா அணிகளும், குரூப் சி-யில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா,பாப்புவா நியூ கினியா அணிகளும், குரூப் டி-யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக ரவி பிஷ்னோய் விளையாடுவது இந்தியாவின் வெற்றியை அதிகப்படுத்தும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
என்னைப் பொறுத்த வரை ரவி பிஷ்னோய் முதன்மை ஸ்பின்னராக ஆட வேண்டும். ஏனெனில் பவுலிங்கை தவிர்த்து அவர் சிறப்பான பீல்டர். குறிப்பாக குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரை விட அவர் சிறப்பான பீல்டர். அதே சமயம் அவர் பேட்டிங்கிலும் கொஞ்சம் ரன்கள் அடிக்கக்கூடியவர்.
கடந்த ஐபிஎல் தொடரில் அவர் தன்னுடைய அணிக்காக ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேர பரப்பரப்பில் அவரும் அவேஷ் கானும் சேர்ந்து லக்னோவுக்காக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். எனவே என்னைப் பொறுத்த வரை ரவி பிஷ்னோய்தான். இவ்வாறு அவர் கூறினார்.