2024 ஐ.பி.எல். தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலக வாய்ப்பு...வெளியான தகவல்..?
|10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.
மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் கடந்த 19ம் தேதி நடந்தது.
ஏலப்பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
இந்த ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் அணியில் இருந்து வீரர்கள் பரிமாற்று முறையில் வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த முடிவை ஒரு தரப்பினர் ஆதரித்தாலும், பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர்.
ஆனாலும், வரும் ஐபிஎல் தொடரில் பாண்ட்யா தலைமையில்தான் மும்பை அணி களம் இறங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காயம் காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்திக் விலகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தின்போது பாண்ட்யா கணுக்காலில் காயம் அடைந்தார். அதன் பின்னர் எந்த வித கிரிக்கெட்டிலும் ஆடாமல் ஓய்வில் இருந்து வரும் பாண்ட்யா ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.