கேப்டன் முதல் பயிற்சியாளர் வரை.. கடந்த உலகக் கோப்பைக்கு பிறகு அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்... மகுடம் சூடுமா இந்திய அணி?
|கடந்த 2021 உலகக் கோப்பையை ஒப்பிடுகையில் இந்த முறை வீரர்கள் தேர்வு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
மும்பை,
ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் அதை தவறவிட்டது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது.
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட்டது.
கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பட்டம் வெல்லும் அணிகளுள் ஒன்றாக இந்திய அணி கருதப்பட்டது. இருப்பினும் அந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில் இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேப்டன் முதல் பயிற்சியாளர் வரை மாற்றப்பட்டுள்ள நிலையில், அணி தேர்விலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், கடந்த முறை இடம்பெறாத 5 வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது. 27 வயதான தீபக் ஹூடா, நடுவரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாட கூடியவர். மேலும், சுழற்பந்தும் வீசக்கூடியவர். இதனால், இந்திய அணிக்கு உலக கோப்பையில் இவர் சிறப்பான பங்களிப்பை வழங்க கூடும்.
கடந்த 2021 ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்சல் பட்டேலுக்கு அப்போது டி20 உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இம்முறை, முதல் முறையாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்சல் பட்டேல் இடம் பிடித்து உள்ளார்.
அதே போல் கடந்த உலகக்கோப்பையில் விளையாடாத யுஸ்வேந்திர சாஹல் இந்த முறை விளையாடுகிறார். அவரின் லெக் ஸ்பின், ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
22 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங், டி20 போட்டிகளில் இறுதி ஓவரில் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரக்கூடியவர். அவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே போல் சமீப காலங்களில் சிறப்பாக விளையாடி தினேஷ் கார்த்திக், தன்னுடைய 37 வது வயதில் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் பேட்டிங்கில் அதிரடி காட்டும் தினேஷ் கார்த்திக், வரும் டி20 உலககோப்பையில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த உலகக்கோப்பையை ஒப்பிடுகையில் இந்த முறை அணியில் கேப்டன், பயிற்சியாளர், வீரர்கள் தேர்வு என அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் கடந்த முறை செய்த தவறுகளை சரி செய்து இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்று ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.