20 ஓவர் உலக கோப்பை: பயிற்சி கிரிக்கெட்டில் இந்தியா- ஆஸ்திரேலியா இன்று மோதல்
|20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி கிரிக்கெட்டில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் இந்த பயிற்சி ஆட்டத்தில் களம் காணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு அணியுடன் இணைந்து விட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் பயிற்சி களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளார்.
இதே போல் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அதனால் இது பயிற்சி மோதல் என்றாலும் கூட விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதே போல் இன்று நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் ஆகிய அணிகளும் பயிற்சி ஆடடத்தில் மோத உள்ளன.
இதற்கிடையே ஓரிரு தினங்களுக்கு முன்புபயிற்சியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை கவர்ந்த சிறுவன் குறித்த வீடியோவை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
பெர்த் மைதானத்தில் காலையில் பல சிறுவர்கள் தங்களது பயிற்சியாளர் ஆலோசனைப்படி பயிற்சியில் ஈடுபட்டனர். இதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை, அவர்களில் துருஷில் சவுகான் என்ற 11 வயது சிறுவனின் இடக்கை பந்து வீச்சு வெகுவாக ஈர்த்தது. உடனே அந்த சிறுவனை அழைத்து உற்சாகப்படுத்திய ரோகித் சர்மா, வலை பயிற்சியில் தனக்கு சில பந்துகளை வீசும்படி கூறினார். அந்த சிறுவன் போட்ட பந்துகளை ரோகித் மெதுவாக அடித்து விளையாடினார். பின்னர் நினைவு பரிசாக ஆட்டோகிராப் போட்டு புகைப்படத்தை வழங்கினார். எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாட விரும்புவதாக துருஷில் சவுகான் கூறியிருக்கிறார்.