20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா; மறக்க முடியாத சில நிகழ்வுகள் - ஒரு பார்வை
|ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் உலக கோப்பை போட்டிக்கு உள்ள மவுசே தனி தான். அதிலும் 20 ஓவர் வடிவில் நடக்கும் போது ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாகி விடுவார்கள்.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியாவில் இன்று ஆரம்பமாகிறது. 16 அணிகள் கோதாவில் குதித்தாலும் கோப்பையை வெல்லும் குடுமிபிடியில் இருப்பது 7-8 அணிகள் தான்.
இந்தியா: ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு படையெடுத்துள்ள இந்தியாவுக்கு இந்த முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக தென்படுகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் 'நம்பர் ஒன்' அணி இந்தியா தான். இந்த ஆண்டில் 20 ஓவர் போட்டிகளில் அதிக வெற்றிகளை (23 வெற்றி) குவித்தது நமது அணி தான். எல்லாவற்றுக்கும் மேலாக ரோகித் சர்மா, விராட் கோலி, 'புதிய சூறாவளி' சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் என்று ஆகச்சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது.
இந்திய அணி வீரர்களின் வயது சராசரி 31.2. இதற்கு முன்பு எந்த உலக கோப்பை போட்டியிலும் இந்தியாவின் சராசரி வயது 30-ஐ தொட்டதில்லை. இப்போது அணியில் உள்ள 15 வீரர்களில் 10 பேர் 30-ஐ தாண்டியவர்கள். இந்த அனுபவம் இந்தியாவுக்கு அனுகூலமாக இருக்கும் என்கிறார்கள், கிரிக்கெட் நிபுணர்கள்.
2021-ம் ஆண்டு உலக கோப்பையில் லீக் சுற்றுடன் மூட்டையை கட்டிய இந்திய அணி, சூழலை நன்கு கணித்து, பதற்றத்துக்கு இடம் கொடுக்காமல் முழு திறமையை காட்டும் பட்சத்தில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை நமது வீரர்கள் உலக கோப்பையை கையில் ஏந்திவிடலாம்.
ஆஸ்திரேலியா: சொந்த மண்ணில் எந்த அணியும் உலக கோப்பையை உச்சிமுகர்ந்ததில்லை என்ற வரலாற்றை மாற்றி அமைக்க அருமையான சந்தர்ப்பம் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு கனிந்துள்ளது. 2021-ம் ஆண்டில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வந்து அமர்க்களப்படுத்தியது. டேவிட் வார்னர் 289 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக ஜொலித்தார். முந்தைய உலக கோப்பை தொடரில் ஆடிய வீரர்களில் பெரும்பாலானோர் அப்படியே தொடர்வதாலும், நன்கு பழக்கப்பட்ட உள்ளூர் சூழலும், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகிய அசுர வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதும் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து: வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் சில ஆண்டுகளாக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்தும் கோப்பைக்கான ரேசில் முன்னணியில் பயணிக்கிறது. கேப்டன் ஜோஸ் பட்லரும், லியாம் லிவிங்ஸ்டன், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் போன்ற ஆல்-ரவுண்டர்களும் தான் இங்கிலாந்தின் தூண்களாக தாங்கிப்பிடிக்கிறார்கள். அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதால் அவர்களின் நம்பிக்கை எகிறியுள்ளது.
பாகிஸ்தான்: அபாயகரமான அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானுக்கும் வாய்ப்பில்லை என்று மறுக்க முடியாது. அவர்களின் பிரதான பலமே தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ரிஸ்வானும், கேப்டன் பாபர் அசாமும் தான். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 8 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். மேலும் உலகின் வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டிருப்பது இந்த அணியின் இன்னொரு சிறப்பு. பவுன்சுக்கு உகந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், நசீம் ஷா ஆகிய வேகப்புயல்கள் ஒருசேர கைவரிசையை காட்டினால் பாகிஸ்தானின் வீறுநடையை தடுப்பது கடினமாகி விடும்.
நியூசிலாந்து: ஆர்ப்பாட்டம் இல்லாமல் நுழைந்து எதிரணியின் மூக்கை உடைப்பது தான் நியூசிலாந்தின் தாரக மந்திரம். 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை, 2015 மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி வரை வந்து ஆச்சரியப்படுத்தியது. இப்போதும் அந்த அணியில் வில்லியம்சன், கப்தில், டிவான் கான்வே, கிளைன் பிலிப்ஸ், டிரென்ட பவுல்ட், டிம் சவுதி, பிரேஸ்வெல் என்று நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.
தென்ஆப்பிரிக்கா: இதுவரை எந்த வடிவிலான உலக கோப்பையையும் புசிக்காத தென்ஆப்பிரிக்கா மீது இந்த தடவை எதிர்பார்ப்பு சற்று குறைவு தான். கடந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் 4-ல் வெற்றி பெற்றும் ரன்ரேட்டில் பின்தங்கியதால் அரைஇறுதி வாய்ப்பை கோட்டை விட்டது. இந்த முறை கேப்டன் பவுமாவின் பேட்டிங் தடுமாற்றம் பெரிய குறையாக கருதப்படுகிறது. அவர்கள் எந்த அளவுக்கு தங்களை மெருகேற்றினாலும் கடைசியில் துரதிர்ஷ்டம் துரத்தி விடும் என்ற பழைய பூச்சாண்டிகளும் தென்ஆப்பிரிக்க வீரர்களின் மனதை உருட்டாமல் இருக்காது.
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்: முன்னாள் சாம்பியன்களான இவ்விரு அணிகளும் இந்த முறை முதலாவது சுற்றில் மோதி அதன் மூலமே சூப்பர்12 சுற்றை எட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதற்கு காரணம் அந்த சமயத்தில் அவர்கள் தரவரிசையில் பின்தங்கி இருந்ததால் தான். ஆசிய கோப்பையை வென்ற பிறகு இலங்கை மீது மற்றவர்களின் பார்வை திரும்பியிருக்கிறது.
வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி சூரர்கள் பொல்லார்ட், கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ ஓய்வு பெற்று விட்டனர். ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரினுக்கு இடமில்லை. ஆனாலும் நிகோலஸ் பூரன் தலைமையில் அனுபவமும், இளமையும் கலந்த அணியாக உள்ளது. ஒருங்கிணைந்து ஆடுவது தான் வெஸ்ட் இண்டீஸ் முன் உள்ள ஒரே சவாலாகும். அதை சரியாக செய்தால் எந்த நேரத் திலும் எரிமலையாய் பொங்கி விடுவார்கள்.
வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற அணிகளில் பிரபலமான ஒரு சில வீரர்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் மாயாஜால சுழற்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை தெறிக்க விடக்கூடியவர். இந்த அணிகள் ஒரு சில ஆட்டங்களில் பெரிய அணிகளுக்கு ஆப்பு வைத்தாலும் வியப்பேதும் இல்லை.
20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு சிறிய தவறு நடந்தாலும் ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறி விடும் என்பதே நிதர்சனமான உண்மை. அதனால் குறிப்பிட்ட நாளில் எதுவும் நடக்கலாம். எந்த அணியும் ஜெயிக்கலாம். அதனால் எந்த அணியையும் சட்டென்று மதிப்பிட்டு விட முடியாது. எல்லாமே தோராயமான ஒரு அலசல் தான். மகுடம் யாருக்கு என்பதை அறிய நவம்பர் 13-ந்தேதி வரை காத்திருந்து தான் ஆக வேண்டும். மொத்தம் 45 ஆட்டங்கள்.... இனி ஒரு மாதத்திற்கு ரசிகர்களுக்கு தீபாவளியுடன் சேர்ந்த சரவெடி கொண்டாட்டம் தான்!!!
அந்த இருவர்
2007-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்துள்ள 7 உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்று இப்போது 8-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் களம் காணும் வீரர்கள் 2 பேர் மட்டுமே. ஒருவர் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, மற்றொருவர் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன். முந்தைய 7 உலக கோப்பை போட்டியிலும் ஆடிய கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ ஓய்வு பெற்று விட்டனர்.
மறக்க முடியாத சில நிகழ்வுகள்...
இதுவரை நடந்துள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மறக்க முடியாத சில நிகழ்வுகள் வருமாறு:-
* 2007-ம் ஆண்டு நடந்த முதலாவது உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 பந்துகளையும் சிக்சராக்கி புதிய சரித்திரம் படைத்தார். முந்தைய ஓவரில் பிளின்டாப் வேண்டுமென்றே யுவராஜ்சிங்கை வம்புக்கு இழுக்க, இதனால் உந்தப்பட்ட அவர் அடுத்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிவிட்டார். இதில் 12 பந்துகளில் 50 ரன்களை கடந்த யுவராஜ், குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையையும் நிகழ்த்தினார்.
* இதே உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 6 ரன் தேவைப்பட்ட போது, அந்த அணியின் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்த மிஸ்பா உல்ஹக் (4 சிக்சருடன் 43 ரன்), வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் ஷர்மா வீசிய 3-வது பந்தை ஸ்டம்பை விட்டு நகர்ந்து வித்தியாசமான முறையில் 'ஸ்கூப் ஷாட்' அடிக்க, அதை ஸ்ரீசாந்த் பிரமாதமாக கேட்ச் செய்தார். இதனால் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வாகை சூடியது. கோப்பையை பறிகொடுத்த விரக்தியில் அப்படியே மைதானத்தில் சில வினாடிகள் மண்டியிட்ட மிஸ்பா உல்-ஹக் அந்த ஷாட்டை நினைத்து பல இரவுகள் தூங்காமல் தவித்தது தனிகதை.
* முதலாவது உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் ஜிம்பாப்வேயிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாகும். இதே போல் 2009-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் லண்டன் லார்ட்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, குட்டி அணியான நெதர்லாந்திடம் அடங்கியது. இதில் 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்துக்கு கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது, இங்கிலாந்தின் பீல்டிங் குளறுபடியால் அந்த ரன்னை எடுத்து வரலாற்று வெற்றி பெற்றது.
* 2016-ம் ஆண்டு உலக கோப்பையில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். பதற்றமின்றி அதை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீசின் கார்லஸ் பிராத்வெய்ட் தொடர்ச்சியாக 4 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி மெய்சிலிர்க்க வைத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 2-வது முறையாக கோப்பையை வென்றது.
* 2021-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா- பாகிஸ்தான் லீக் ஆட்டம் துபாயில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 151 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அதை 17.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. உலக போட்டி ஒன்றில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது இதுவே முதல் முறையாகும்.
அதிக ரன்கள்... கோலிக்கு முதலிடம்
2014-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் விராட் கோலி 6 ஆட்டத்தில் விளையாடி 4 அரைசதம் உள்பட 319 ரன்கள் குவித்தார். 20 ஓவர் உலக கோப்பை தொடர் ஒன்றில் ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்கள் இது தான்.
அதிரடி சூரர்கள்....
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)
விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ரன் சேகரிப்பதில் வல்லவர். உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனாக திகழும் அவர் இந்த ஆண்டில் 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் (18 ஆட்டத்தில் 821 ரன்) குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். மனுஷன் களம் இறங்கினால் குறைந்தது 50 ரன்கள் எடுத்தால் தான் திருப்தி அடைவார். கடந்த 12 இருபது ஓவர் இன்னிங்சில் 7-ல் அரைசதம் அடித்ததே அதற்கு சான்று.
20 ஓவர் கிரிக்கெட்டில்.... ஆட்டம்: 73, ரன்-2,460, சதம்-1, அரைசதம்-22
ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)
சிறிது நேரமே களத்தில் நின்றாலும் ரன்ரேட்டை தாறுமாறாக உயர்த்தி விடக்கூடியவர், பட்லர். கடந்த உலக கோப்பை போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர். மேலும் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக 4 சதங்கள் அடித்து சாதனை படைத்ததை மறந்து விட முடியாது. சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 2 அரைசதங்கள் அடித்த பட்லரின் ரன்வேட்டை இங்கு நீடிக்கும் என்று நம்பலாம்.
20 ஓவர் கிரிக்கெட்டில்.... ஆட்டம்-97, ரன்-2,377, சதம்-1, அரைசதம்-17
டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்கா)
'கில்லர் மில்லர்' என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு தனக்குரிய நாளாக அமைந்து விட்டால் பவுலர்களின் கண்களை குளமாக்கி விடுவார். 20 ஓவர் போட்டியில் குறைந்த பந்தில் (35 பந்து) சதம் அடித்த சாதனையாளரான மில்லர் நல்ல பார்மில் இருப்பதால் உலக கோப்பை போட்டியிலும் முத்திரை பதிக்க வாய்ப்புள்ளது.
20 ஓவர் கிரிக்கெட்டில்.... ஆட்டம்: 107, ரன்-2,069, சதம்-2, அரைசதம்-5
மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
களத்தில் இவரது கால் அழுத்தமாக ஊன்றி விட்டால் அதன் பிறகு பவுலர்கள் பாடு திண்டாட்டம் தான். ஸ்டிரைக் ரேட்டை 150.4 ஆக வைத்திருக்கும் மேக்ஸ்வெல் கடந்த 7 இன்னிங்சில் ஒற்றை இலக்கத்தை தாண்டாவிட்டாலும் உள்ளூர் ரசிகர்களை தனது அதிரடி ஜாலத்தால் குதூகலப்படுத்த தயாராகி விட்டார்.
20 ஓவர் கிரிக்கெட்டில்... ஆட்டம்: 94, ரன்-2,041, சதம்-3, அரைசதம்-9
சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
இந்திய கிரிக்கெட் அணியில் உருவெடுத்துள்ள புதிய அவதாரம். இந்த ஆண்டில் 51 சிக்சர்கள் நொறுக்கியுள்ள அவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 50 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். டிவில்லியர்ஸ் போன்று மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டும் வித்தையை கற்றுள்ள சூர்யகுமாரை 'மிஸ்டர் 360 டிகிரி்' என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். அண்மையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவரது அசாத்தியமான மட்டை சுழற்றலை பார்த்து எதிர்முனையில் நின்ற விராட் கோலியே மிரண்டு போய் விட்டார். இந்த உலக கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்களில் ஒருவராக அவர் இருப்பார்.
20 ஓவர் கிரிக்கெட்டில்..... ஆட்டம்-34, ரன்-1,045, சதம்-1, அரைசதம்-9