20 ஓவர் உலக கோப்பை: இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோக்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்ப்பு
|20 ஓவர் உலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக பேர்ஸ்டோ விலகி உள்ளார்.
லண்டன்,
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு இது தான் முதல் உலக கோப்பை ஆகும். இந்த இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ முதலில் இடம் பெற்றிருந்தார். அணி அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் காயம் காரணமாக வருகிற 20 ஓவர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஜானி பேர்ஸ்டோ அறிவித்திருந்தார். காயம் அடைந்த பேர்ஸ்டோக்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்று வீர்ரை அறிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், பேர்ஸ்டோக்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த 2019-ம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு திரும்பி உள்ளார். ஹேல்ஸ் இதுவரை 60 டி-20 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார்.