இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து மார்ஷ், ஸ்டார்க், ஸ்டோனிஸ் விலகல்
|காயத்தால் விலகியவர்களுக்கு பதிலாக நாதன் எலிஸ், டேனியல் சாம்ஸ், சீன் அப்போட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த வாரம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி மொகாலியில் வருகிற 20-ந் தேதியும், 2-வது போட்டி நாக்பூரில் 23-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் ஐதராபாத்தில் 25-ந் தேதியும் நடக்கிறது.
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய 20 ஓவர் அணியில் இடம் பெற்று இருந்த அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முழங்கால் காயத்தாலும், ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் மார்ஷ் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தாலும், மார்கஸ் ஸ்டோனிஸ் விலாபகுதி காயத்தாலும் விலகி இருக்கின்றனர்.
3 வீரர்களுக்கும் லேசான காயம் தான் என்றாலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்கி நடக்க இருப்பதால் முன்னெச்சரிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தால் விலகியவர்களுக்கு பதிலாக நாதன் எலிஸ், டேனியல் சாம்ஸ், சீன் அப்போட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டிம் டேவிட், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், நாதன் எலிஸ், ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஆடம் ஜம்பா.