உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து 2 வீரர்கள் விலகல்
|உலகக் கோப்பை போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து நார்ட்ஜே, மகாலா ஆகியோர் விலகி இருக்கின்றனர்.
ஜோகன்னஸ்பர்க்,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நார்ட்ஜே முதுகு வலியாலும், சிசன்டா மகாலா இடது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கு களம் திரும்பிய நார்ட்ஜே, 5 ஓவர்கள் மட்டும் பந்து வீசி விட்டு வெளியேறியதுடன் தொடரில் இருந்தும் ஒதுங்கினார். இதேபோல் 3-வது ஒருநாள் போட்டியில் ஆடிய மகாலா காயத்தால் வெளியேறினார். இருவரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட உடல் தகுதி சோதனையில் தேறவில்லை.
இதனையடுத்து உலகக் கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து அன்ரிச் நார்ட்ஜே, சிசன்டா மகாலா ஆகியோர் விலகி இருக்கின்றனர். இது தென்ஆப்பிரிக்க அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்கள் பெலக்வாயோ, லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.