இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து 2 முன்னணி இந்திய வீரர்கள் விலகல்
|முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இருவரும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது ஜடேஜாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. அதேவேளையில் கே.எல். ராகுலுக்கு தசைநாரில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் 2-வது போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இருவரின் காயத்தன்மையின் முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.
இவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இருவரும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு இருவரும் அணிக்கு திரும்பினால் சிறப்பானதாகும்.