இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு 2 கேப்டன்கள்... வெளியான தகவல்
|இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ரோகித், விராட் மற்றும் பும்ரா ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது.
இதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அதன் மண்ணில் இந்தியா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. ஜூலை 27 - ஆகஸ்ட் 7 வரை நடைபெறும் அந்தத் தொடரிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விலகி விட்டதால் 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ரோகித் சர்மா ஓய்வு எடுப்பதால், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.