முதல் டி20 போட்டி: ரியான் பராக் அசத்தல் பந்துவீச்சு...இலங்கையை வீழ்த்திய இந்தியா
|இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பல்லகெலே,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் மதீஷா பதிரனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் புகுந்தது. இலங்கையின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் புகுந்தனர். இருவரும் இந்தியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் குசல் மெண்டிஸ் 45 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசாங்கா அரைசதம் அடித்த நிலையில் 79 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் புகுந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
இதில் குசல் பெரேரா 20 ரன், காமிந்து மெண்டிஸ் 12 ரன், அசலங்கா மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும், ஹசரங்கா 2 ரன்னிலும், பதிரனா 6 ரன்னிலும், தீக்ஷனா 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.