இளம் வயதில் 100-வது சர்வதேச போட்டி: வரலாற்று சாதனை படைத்த ஷபாலி வர்மா
|வங்காளதேசம் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று முடிந்தது
டாக்கா,
வங்காளதேசம் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் 4 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டி20 போட்டியானது சில்ஹெட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்ன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் ஷபாலி வர்மா களமிறங்கியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மிக இளம் வயதில் 100-வது சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை எனும் வெஸ்ட் இண்டீஸின் ஷெமைன் காம்பெல்லின் சாதனையை ஷபாலி வர்மா முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷெமைன் காம்பெல் 21 வயது 18 நாள்களில் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஷபாலி வர்மா 20 வயது 102 நாள்களில் 100-வது சர்வதேச போட்டியில் பங்கேற்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.