ஐ.பி.எல்; முஸ்தாபிசுர் அபார பந்துவீச்சு - பெங்களூரு 173 ரன்கள் சேர்ப்பு
|சென்னை அணி தரப்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சென்னை,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெஸ்சிஸ் மற்றும் கோலி ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பிளெஸ்சிஸ் 35 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய படிதார், மேஸ்வெல் இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து க்ரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டு வந்த நிலையில் கோலி 21 ரன்னிலும், க்ரீன் 18 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் பெங்களூரு அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு தரப்பில் அனுஜ் ராவத் 48 ரன்னும், தினேஷ் கார்த்திக் 38 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி ஆட உள்ளது.