வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்; புஜாராவை பலிகடா ஆக்கியது ஏன்...? - சுனில் கவாஸ்கர் கேள்வி
|உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ரகானேவை தவிர யாரும் சரியாக ஆடவில்லை. ஆனால், புஜராவை பிசிசிஐ பலிகடா ஆக்கியுள்ளது.
மும்பை,
2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ரகானேவை தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக ஆடினார்கள்.
ரஹானே மட்டுமே பேட்டிங்கில் சிறிது நம்பிக்கை அளித்தார். இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெற்ற ரகானே, கோலி, ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஆனால், அதேவேளையில் சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருதுராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியில் புஜாரா இடம் பெறாதது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றன. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும் போது,
அவர் ஏன் நீக்கப்பட்டார்? நம்முடைய பேட்டிங் தோல்விக்காக அவர் ஏன் பலிகாடாக உருவாக்கப்பட்டுள்ளார்? அவர் இந்திய கிரிக்கெட்டின் விஸ்வாசமான வீரர். இந்தியாவுக்காக விஸ்வாசமாக செயல்பட்டு சாதனை படைத்தவர்.
ஆனால் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டிருக்காத காரணத்தால் அவரை நீங்கள் எளிதாக நீக்கியுள்ளீர்கள். இது நான் புரிந்து கொள்வதற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.