< Back
உங்கள் முகவரி
கட்டிடங்களில் நீர்க்கசிவு பராமரிப்பு முறைகள்
உங்கள் முகவரி

கட்டிடங்களில் நீர்க்கசிவு பராமரிப்பு முறைகள்

தினத்தந்தி
|
5 Feb 2023 9:39 AM IST

கட்டிடங்களில் நீர் கசிவினால் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறைந்து விடுகிறது. அதன் ஆயுட்காலமும் பாதிப்படைகிறது. எனவே நீர் கசிவினால் கூரைகளிலும் சுவர்களிலும் ஏற்படும் வெடிப்புகள் ஓதங்கள் போன்றவற்றை சரியான முறையில் பழுது பார்த்து சரி செய்வது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் நீர்க்கசிவை சரி செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டு பழுது பார்க்கும் முறை என்பது சரியானது அல்ல. பல முறைகளை உள்ளடக்கிய நீர்க்கசிவு பழுது பார்க்கும் முறை என்பதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஒரு வீட்டின் கூரை மற்றும் சுவர்களில் ஏற்பட்டிருப்பது வெளி பூச்சில் ஏற்பட்ட வெடிப்பா கான்கிரீட்டில் ஏற்பட்ட வெடிப்பா, துளைகளா கான்கிரீட்டில் இருக்கும் நுண்குழாய்களா அல்லது ஜாயிண்டுகளில் உள்ள வெற்றிடங்களா என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும். கான்கிரீட்டில் உள்ள போரோசிட்டி அதாவது புரசல் தன்மையையும் கேபிலரி கபிலிட்டி என்ற நுன்குழாய்களின் தடத்தில் தண்ணீர் புகுவதா? என்று ஆராய்ந்து அவற்றை சரி செய்வதற்கான கலவைகள் மற்றும் சேர்க்கைகள் போன்றவற்றைக் கொண்டு பொருத்தமான பூச்சுகளை பயன்படுத்தி இவற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

பொதுவாக கட்டிடங்களுக்கு வயதாவதினாளும் தேய்மானத்தினாலும் இந்த மாதிரியான பழுது பார்க்கும் முறை தோல்வி அடைவதாலும் தண்ணீர் புகுந்து விடலாம். இம்மாதிரியான நேரங்களில் தான் வாட்டர் ப்ரூஃபிங் என்ற முறை பயன்படுகிறது. இந்த ரெமிடியல் வாட்டர் ப்ரூஃபிங் என்ற முறையில் கட்டிடத்துக்குள் அதாவது சுவர், மேற்கூரையின் தளம், தரை போன்ற இடங்களில் நீர் கசிவு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. கட்டிடத்தின் இந்த பகுதிகளை உறுதியாக்குவதின் மூலமும் ஜாயிண்டுகளை சரி செய்வதன் மூலமும் தண்ணீர் உட்புவதை குறைத்து விடலாம்.

இன்ஜெக்ஷன் மூலம் வாட்டர் ப்ரூஃபிங் செய்வது

இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் நீர்க்கசிவை தடுக்க பெருமளவில் உதவுகிறது. இந்த வெடிப்புகளையும் கசிவுகளையும் சரி செய்ய உபயோகிக்கும் பொருளும் உபயோகிக்க பயன்படுத்தும் முறையும் வெடிப்புகளின் அளவு அதாவது அகலம் நீளம் அதனுடைய ஈரத்தன்மை மற்றும் அதன் ஆழத்தை பொறுத்ததாகும். சிமெண்ட், இபாக்ஸி, பியு. அக்ரிலிக் ஜுல்ஸ் மற்றும் கோட்டிங்குகள் கொண்டு இந்த இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். விரிசலின் அளவைப் பொறுத்து இந்த பொருட்களும் மாறுபடுகிறது. பொதுவாக கான்கிரீட்டில் சரியான முறையில் செட் ஆகவில்லை என்றாலும், தேன்கூடு போன்ற அமைப்பு கான்கிரீட்டில் ஏற்பட்டிருந்தாலும், சில நேரங்களில் தண்ணீர் கசிவு ஒரு இடத்தில் இருந்து பல இடங்களுக்கும் கசிந்து செல்வதுண்டு. இந்த மாதிரியான நேரங்களில் கிரிட் இஞ்செக்சன் என்ற முறையை பயன்படுத்துகிறார்கள். கசிவு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாத பட்சத்தில் தண்ணீர் கசிவை முழுவதுமாக நிறுத்துவதற்கு இந்த முறை பயன்படுகிறது.

பொதுவாக இன்ஜெக்ஷன் முறையில் விரிசலை சுற்றி செலுத்தும் பொருள் பாலியூரிதேன் என்று அழைக்கப்படும் கலவையாகும். இதே லேசான நீர் கசிவு அல்லது வெறும் ஈரப்பதம் மட்டுமே இருக்கும் பட்சத்தில் லோ ஃபோமிங் பாலியூரிதேன் என்ற பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிக நீர்க்கசிவுக்கு ஹய் ஃபோமிங் பாலியூரிதேன் என்ற பொருள் உபயோகப்படுத்துகிறது. இதேபோல் வாட்டர் பார் இஞ்செக்சன் என்ற தொழில்நுட்பமும் நீர் கசிவை சரி செய்ய உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுவாக நீர் கசிவுகளை சரி செய்ய இன்ஜெக்ஷன் ட்ரீட்மென்ட் முறை மிகவும் நல்ல பலனை கொடுக்கும். இந்த இன்ஜெக்ஷன் முறை முடிந்த பின்பு கடைசியாக கோட்டிங் சிஸ்டம் மூலம் இந்த வாட்டர் ப்ரூஃபிங் முறையை முழுமையானதாக செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்