< Back
உங்கள் முகவரி
இக்கால தொழில்நுட்பம் இன்டர்லாக் பிரிக்ஸ் கட்டுமானம்
உங்கள் முகவரி

இக்கால தொழில்நுட்பம் "இன்டர்லாக் பிரிக்ஸ்" கட்டுமானம்

தினத்தந்தி
|
1 July 2023 3:17 PM IST

அனைத்து கட்டுமான பணிகளுக்கும் செங்கல் அதிகமாக பயன்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செங்கல் தயாரிக்க செம்மண், சுடுவதற்கான வெப்பம் ஆகியவை அவசியம். அதற்காக விறகுகள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதனால், மத்திய அரசு கட்டுமான பணிகளில் செங்கல் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தியது.

செங்கலுக்கு மாற்றாக பலவிதமான கட்டுமானக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சி.எல்.சி, கான்கிரீட் பிளாக் என பலவித கற்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. மாற்று கட்டுமான கற்களுள் இண்டர்லாக் பிரிக்ஸ் (Interlock Bricks) என்பது ஒரு வகையாகும்.

பிரத்யேகமாக தயாரித்த அச்சில் கலவை வார்க்கப்பட்டு நல்ல பினிஷிங் கொண்டதாக இந்த கற்கள் உருவாக்கப்படுகின்றன. இம்முறையில் கட்டுமானக் கல்லை ஒன்றுடன் ஒன்று கச்சிதமாக இணைத்துக்கொள்ளும்படி, ஒவ்வொரு கல்லும் தக்க மேடு, பள்ளம் கொண்டதாக தயாரிக்கப்படுவதால் கற்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து சுவர்களை அமைக்கலாம். சிமெண்டு கலவை தேவைப்படுவதில்லை. இண்டர்லாக் பிரிக்ஸ் தயாரிக்க அந்தந்த பகுதியில் கிடைக்கும் மண்ணையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். செம்மண் அதிகமாகக் கிடைக்கும் பகுதியில் அதை சலித்து, கிடைக்கும் பொடி மண்ணைத் தனியாக எடுத்து விட்டு, பரு மண்ணை கிரஷரில் அரைவை செய்யப்படும்.

அரைவை முடிந்த பின்னர், அதில் பொடி மண் சரிக்குச்சரி விகிதத்தில் கலக்கப்படும். இந்த மண் கலவையுடன் 90:10 என்ற விதத்தில் சிமெண்டு கலக்கப்படும். அதாவது, பத்து பாண்ட் அளவுள்ள மண்ணுக்கு, ஒரு பாண்ட் சிமெண்டு என்ற விகிதத்தில் கலக்கப்படும். இந்தக் கலவைக்குள் போதிய அளவில் ஒட்டும் தன்மை கொண்ட ரசாயனம் கலக்கப்படும். சிமெண்ட் பயன்பாடு மற்றும் டி.எம்.டி கட்டுமானக் கம்பி பயன்பாடு குறையும். இவ்வகையிலான இண்டர்லாக் கல்லை கையாள்வது எளிது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்லாமல் செங்கலைவிடத் தாங்குதிறன் அதிகமாகும். மேற்புறத்தில் சிமெண்டு பூச்சு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இண்டர்லாக் பிரிக் வகையை வழக்கமான செங்கலை அடுக்குவதுபோல அடுக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்லிலும் உள்ள மேடு, பள்ளம் கொண்ட பகுதியை கச்சிதமாக இணைப்பது அவசியம். பிறகு கடைசியாக இண்டர்லாக் பிரிக் மேல் பாகத்தில் உள்ள துளை வழியாக சிமெண்டு கலவையை ஊற்றி விட்டால் போதுமானது. மேலும், இவ்வகை கட்டுமானத்துக்கு மேற்பூச்சும் தேவையில்லை. நேரடியாக பெயிண்டிங் செய்து கொள்ளலாம். நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்தும் வகையில் குறைவான பட்ஜெட்டில் இவை சந்தையில் கிடைக்கின்றன.

மேலும் செய்திகள்