அறைகளுக்கு பொருத்தமான மேசைகள்
|மரம், கல், உலோகம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினாலான தட்டையான மேல் பகுதியைக் கால்கள் அல்லது தூண்களின் உதவியுடன் தாங்கி நிற்கக்கூடிய அறைகலன் என்று மேசைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். மேசைகள் பல்வேறு காரணிகளால் வகைப்படுத்தப்படுகின்றன. அதேபோல் மேசைகளை நிலையானவை மற்றும் மெக்கானிக்கல் டேபிள்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.
நிலையான மேசைகளை அதன் இடத்தில் இருந்து நகர்த்துவது மற்றும் அளவை சிறிதாக்குவது அல்லது பெரிதாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.இது போன்ற நிலையான மேசைகள் எப்பொழுதும் அளவில் பெரியதாகவே இருக்கும். அதேபோல் இந்த மேசைகளை மேசையின் மையத்தில் தாங்கக்கூடிய தூண் போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
மெக்கானிக்கல் டேபிள்கள் நகர்த்த, மடிக்க மற்றும் மறுசீரமைக்கும் விதத்தில் டாப்ஸ் மற்றும் கால்களுடன் இருக்கும்படி வடிவமைக்கப் படுகின்றன. டிராப் லீஃப் டேபிள்கள், டில்டிங் டேபிள்கள் மற்றும் மடிக்கக்கூடிய விதத்தில் கால்களுடன் இருக்கும் டேபிள்களை மெக்கானிக்கல் டேபிள்களுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
பலவகையான டேபிள்கள்
மேசைகளில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் அவற்றின் செயல்பாடு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு நம் வீட்டிற்கு எந்த வகை மேசைகள் பொருத்தமானவை என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதேபோல், எந்த அறைக்கு எந்த மேசையை தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்ததாகும். சில மேசைகள் வீட்டின் அழகியலை மேம்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
*டைனிங் டேபிள்: ஒவ்வொரு வீட்டின் உணவருந்தும் அறையின் அளவிற்கு ஏற்ப இந்த டேபிள்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம்..அதேபோல் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்பவும் இவற்றை தேர்ந்தெடுக்கலாம்.இந்த டேபிள்களில் மிகப் பெரிய அளவு முதல் மிகச் சிறிய அளவு வரை வடிவமைக்கப்படுகின்றன. ஒருவர் மட்டுமே அமர்ந்து உணவருந்தக் கூடிய டேபிள்களும்,ஒரே நேரத்தில் இருபது நபர்கள் வரை கூட அமர்ந்து உணவருந்தும் டேபிள்களும் உள்ளன.நம்முடைய உணவருந்தும் அறையின் அளவிற்கேற்ப சதுர, செவ்வக, வட்டவடிவ அல்லது நீள்வட்ட வடிவங்களில் வரும் டைனிங் டேபிளை தேர்ந்தெடுக்கலாம்..
*காஃபி டேபிள்: பெரும்பாலான வீடுகளில் வரவேற்பறையில் சோபாவின் எதிர்ப்புறத்தில் இதுபோன்ற காஃபி டேபிள்களைப் பார்க்க முடியும்.காஃபி டேபிள் இல்லாத வரவேற்பறை முழுமையடையாத ஒன்றாக இருக்கும் என்றும் சொல்லலாம். இந்த டேபிள்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து காஃபி மற்றும் சிற்றுண்டி உண்ணக்கூடிய இடமாக இருக்கின்றது..
*கிட்சன் டேபிள்: காய்கறிகளை வெட்டுவதற்கும்,சமைப்பதற்கும், பொருட்களை வைப்பதற்கும், பாத்திரங்களை வைப்பதற்கும் சமையலறையில் ஒரு அலமாரி போல இந்த டேபிள்கள் செயல்படுகின்றன. சமையலறையின் அளவிற்கேற்ப இவை பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கின்றன.மரத்தினால் செய்யப்பட்டு வந்த இந்த டேபிள்கள் இப்பொழுது கடப்பா மற்றும் கிரானைட் கற்களினால் வடிவமைக்கப்பட்டும் வருகின்றன
*கம்ப்யூட்டர் டேபிள்: இப்பொழுது இந்த டேபிள்கள் இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிது. கீபோர்டுகளை வைப்பதற்கான ட்ரே, பிசி ஸ்டாண்ட்,சிறிய ஸ்டோரேஜ் பகுதியுடன் வரும் இந்த டேபிள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு வசதியாக சக்கரங்களுடன் வருகின்றன.இந்த டேபிள்களின் பின்புறத்தில் கம்ப்யூட்டரிலிருந்து செல்லும் வயர்களை எடுத்துச் செல்வதற்கென துளைகள் கொடுக்கப்பட்டுள்ளன.எல் வடிவத்தில் வரும் கம்ப்யூட்டர் டேபிள் அதிக வேலை செய்யக்கூடிய இடத்துடன் வருவதால் மிகவும் பிரபலமான மாடலாக இருக்கின்றது.
* மெட்டல் டேபிள்: வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் இவ்வகை டேபிள்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன.டைனிங் டேபிளுக்கு மாற்றாகவும் இவை செயல்படுகின்றன.பலவிதமான உலோகங்களினால் செய்யப்படும் இந்த டேபிள்கள் மிகவும் உறுதியானவையாகவும், நீடித்து உழைப்பவையாகவும் இருக்கின்றன. வீடுகளில் மட்டுமல்லாது மக்கள் கூடும் இடங்களில் உணவு பரிமாறுவதற்கு இந்தவகை டேபிள்களையே இன்றளவும் உபயோகப்படுத்துகிறார்கள்.
* கிளாஸ் டேபிள்: முற்றிலும் கண்ணாடியால் செய்யப்பட்டுவரும் டேபிள்கள் வீட்டிற்கு அழகிய தோற்றத்தை தருகின்றன.முற்றிலும் கண்ணாடியால் செய்யப்படும் இவை பெரும்பாலும் வரவேற்பு அறைகளை அலங்கரிப்பவையாக இருக்கின்றன..இந்த டேபிள்களின் கீழ்ப்புறத்தில் இருக்கும் செல்ஃபில் வைக்கப்படும் பொருள்கள் டேபிளின் மேற்புறத்தில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிவதுபோல் வடிவமைக்கப் படுகின்றன. இவற்றில் சில மேற்புறம் மட்டும் கண்ணாடியால் செய்யப்பட்டு அதன் கால்கள் மற்றும் கீழ்ப்புறத்தில் இருக்கும் செல்ஃபானது மெட்டல் அல்லது மரத்தினால் செய்யப்பட்டும் வருகின்றது.
*மார்பிள் டேபிள்: நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அழகிய தோற்றத்தின் காரணமாக மார்பிள்களை டேபிள் டாப்களாக உபயோகிக்கிறார்கள். அலுவலக அறைகளிலும், உணவருந்தும் அறைகளிலும் இதுபோன்ற மார்பிள் டேபிள்களை அதிக அளவில் பார்க்க முடியும்.. சுண்ணாம்புக்கல் கடுமையான அழுத்தம் மற்றும் வெப்பத்திற்கு உட்படுத்தப்படும் பொழுது அது உருமாற்றமடைந்து பளிங்கு கல்லாக உருவாகின்றது.இந்தக் கற்கள் பாலிஷ் போடப்பட்டு மிகவும் கவர்ச்சிகரமாகவும்,நுண்ணிய தன்மை கொண்டதாகவும் இருப்பதால் இவற்றை மேசைகள் செய்வதற்கும் உபயோகப்படுத்துகிறார்கள்.
*ஃபார்ம் ஹவுஸ் டேபிள்: முற்றிலும் மரத்தால் செய்யப்படும் இவ்வகை டேபிள்கள் பண்ணை வீடுகள் மற்றும் தோட்டங்களில் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகை மேசைகளுக்கு எந்தவிதமான பாலிஷ்களும் போடாமல் இயற்கை தோற்றத்துடன் இருப்பது போலவே செய்யப்படுகின்றன.
*நெஸ்டட் டேபிள்: பலவிதமான உயரங்களில் ஒன்றன் கீழ் ஒன்றை அடுக்கி வைத்துக் கொள்வது போல் மிகவும் காம்பாக்ட்டாக இருக்கும் டேபிள்கள் என்று இவற்றைச் சொல்லலாம்.. மிகவும் இடம் குறைவான வீடுகளில் பயன்படுத்துவதற்கு மிகச்சரியான மேசைகள் இவை.குறைந்தபட்சம் மூன்று டேபிள்கள் முதல் இருப்பதுபோல் இவை வடிவமைக்கப்படுகின்றன. இதில் தேவைப்படும் டேபிள்களை மட்டும் எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வேலை முடிந்ததும் ஒன்றன் கீழ் ஒன்றாக மிகக் குறைந்த இடத்தில் இடம் அடைக்காதவாறு இவற்றை அடுக்கி வைத்துக் கொள்ளலாம். மிகக் குறைவான உயரமுள்ள இதிலிருக்கும் டேபிளை ஸ்டூல் போல உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
* பிக்னிக் டேபிள்: வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் தோட்டம் மற்றும் கொல்லைப்புறத்தில் அமர்ந்து உணவு அருந்துவதற்கு ஏற்ற டேபிள் என்று இவற்றைச் சொல்லலாம்.பெரும்பாலும் இதுபோன்ற டேபிள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மடக்கி எடுத்துச் செல்வது போல் வடிவமைக்கிறார்கள்.நாம் பிக்னிக் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருப்பதாலேயே இந்த மேசைகள் பிக்னிக் டேபிள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
* வால் மௌண்டெட் டேபிள்: மிகச்சிறிய வீடுகளில் சுவர்களில் பொருத்தி பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்படும் இவ்வகை டேபிள்களை இப்பொழுது பெரும்பாலான வீடுகளில் பார்க்க முடிகின்றது.படிக்க, வேலை செய்ய, இஸ்திரி செய்ய என பலவிதத்திலும் பயன்படும் இந்த மேசைகளை தேவைப்படும் பொழுது நிமிர்த்தி வைத்துக் கொள்ளலாம். வேலை முடிந்ததும் அவற்றை நெகிழ்த்தி சுவற்றுடன் தொங்க வைத்து விடலாம்.