< Back
உங்கள் முகவரி
ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற சோபாக்கள்
உங்கள் முகவரி

ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற சோபாக்கள்

தினத்தந்தி
|
9 July 2022 7:05 AM IST

கௌச்சஸ் அல்லது சோபாக்கள் பொதுவாக உட்காருவதற்கும், தூங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. படுக்கை அறைகள், லிவிங் ரூம் மற்றும் வரவேற்பு அறைகளில் போடுவதற்கென்று வகைவகையான சோஃபாக்கள் வந்துள்ளன. வீடுகளில் மட்டுமல்லாது ஹோட்டல்கள், வணிக அலுவலகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போடக் கூடிய வகையில் சாதாரணமானது முதல் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருக்கக்கூடிய வகையில் சோபாக்கள் காணப்படுகின்றன. பல்வேறுவிதமான வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் டிசைன்களில் இவை விற்கப்படுகின்றன. சோபாக்களில் இருக்கும் சில வகைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

மாட்யூலர் கௌச்சஸ்

இவை மிகவும் அனுசரிப்பு மற்றும் பல்துறை திறன் கொண்டவையாக இருக்கின்றன. இவை பல துண்டுகளாக இருப்பதால் இவற்றை அறையின் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார்போல் பொருத்திக் கொள்ளலாம். இவற்றை ஆங்கில எழுத்தான எல் அல்லது யூ வடிவில் அமைத்துக்கொள்ளலாம். இவை இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றார் போலவும் , மிகவும் வசதியானதாகவும் இருக்கின்றது.அதில் பல தனிப்பட்ட நாற்காலிகள் இருப்பதால் அவற்றை பல்வேறு கட்டமைப்புகளாக உருவாக்க முடியும்.வரவேற்பறை மட்டுமல்லாது எந்த அறைக்கும் பொருந்தக்கூடிய சோஃபாக்களாக இவை இருக்கின்றன.

செக்ஷனல் கௌச்சஸ்

இரண்டு பகுதிகளாக செய்யப்பட்ட இவை பெரிய வீடுகள் அல்லது சிறிய அளவிலான வீடுகள் என அனைத்துக்கும் பொருத்தமானவையாக இருக்கும். சோபாவின் பல பகுதிகளை தனித்தனியாகப் பிரிக்கலாம் மற்றும் வெவ்வேறு அல்லது புதிய கட்டமைப்பில் மறுசீரமைக்கலாம்.மிகச்சிறிய இடம் கொண்ட வீட்டிற்கு செக்ஷனல் சோபா சிறந்த தேர்வாகும்.பல உறுப்பினர்கள் ஒன்றாக அமரக்கூடிய விதத்தில் இதில் இருக்கும் இருக்கை பகுதியை அதிகரிக்க முடியும்.

லவ்சீட் சோபா

இரண்டு நபர்கள் மட்டுமே அமரக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சோபாவை மிகச் சிறிய அறைகளில் கூட போட முடியும். சாதாரணமாக இருக்கும் சோஃபாக்களில் மூன்று இருக்கைகள் இருந்தால் இந்த வகை சோபாவில் 2 இருக்கைகள் மட்டுமே இருக்கும். இதனை இரண்டு சீட்டர் சோபா என்றும் அழைக்கிறார்கள்.

ஸ்லீப்பர் சோஃபாக்கள்

பெயருக்கு ஏற்றார்போல் இவற்றை படுக்கையாக மாற்றிக்கொள்ள முடியும். சோபாவாக மடிக்கப்பட்டிருக்கும் மெத்தையை விரிக்கும் பொழுது அது மிகவும் நேர்த்தியான படுக்கையாக மாறுகின்றது.இவை படுக்கை அறைகளில் அமைப்பதற்கு ஏற்றவை.

செஸ்டர்ஃபீல்ட் கௌச்சஸ்

இந்த சோஃபாக்கள் பெரியதாக உருட்டப்பட்ட கைகளுடன் கை வைக்கும் இடம் மற்றும் சோபாவின் பின்புறம் சாய்ந்து கொள்ளும் இடம் என அனைத்தும் ஒரே உயரத்தில் பார்ப்பதற்கு அருமையான தோற்றத்துடன் இருக்கின்றன. வெல்வெட் மற்றும் நவீன பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த சோபாக்கள் உயரமான கால்கள், மெலிதான கைகள், மெலிதான பின்புற சாய்விடம் என வடிவமைக்கப்பட்டும் வருகின்றது. அலுவலக அறைகளுக்கு ஏற்ற சோபாக்கள் என்று இவற்றைச் சொல்லலாம்.

பிரிட்ஜ்வாட்டர் சோபா

இந்த சோபா அமைக்கப்படும் அறையின் தோற்றத்தை சாதாரணமாகவும் நட்பு சூழ்நிலையை உருவாக்கும் விதமாகவும் மாற்றுகின்றது. இது உன்னதமாகவும், எளிமையாகவும் இருப்பதுடன் அதிக வசதியை அளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.இந்த சோஃபா பின்புற குஷன், தளர்வான இருக்கை மற்றும் சோபாவின் பின்புறத்தை விட அவற்றின் கை வைக்கும் இடம் தாழ்வாக இருப்பது போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது.இவற்றை மற்ற நாற்காலிகளுடன் சேர்த்துப் போடும்பொழுது நவீன தோற்றத்தைத் தருகின்றது.

டக்ஷிடோ கௌச்சஸ்

இதன் பெயர் நியூயார்க்கில் உள்ள கம்பீரமான நகரமான டக்செடோ பூங்காவிலிருந்து பெறப்பட்டது.இவை பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கின்றன. இது ஒரு முறையான பாணியைக் கொண்ட அறைக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

லாசன் கௌச்சஸ்

எளிமையான ,தளர்வான பின் தலையணைகள் மற்றும் மூன்று இருக்கைகள் அல்லது குஷன் வடிவமைப்புடன் இவ்வகை சோபாக்கள் செய்யப்படுகின்றன. இந்த சோபாக்களில் பின்புற கைகள் சதுரமாகவோ அல்லது சுருட்டப்பட்டதாகவோ, தூங்குவதற்கு ஏற்ற உயரத்துடன் காணப்படுகின்றன. இது பல அளவு, வடிவம், வண்ணங்கள் மற்றும் பொருட்களில் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதிலிருக்கும் பின்புற குஷன்கள் பாரம்பரிய சோபாக்களை விட அதிக வசதியை அளிக்கின்றன.பெரிய விசாலமான எந்த ஒரு அறையிலும் இவற்றை அமைக்கலாம். உயரமானவர்களும் படுத்துறங்கும் விதத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. லிவ்விங் ரூம், கேமிங் ரூம், பேமிலி ரூம், படுக்கை அறைகள், வீட்டில் இருக்கும் அலுவலக அறைகள் மற்றும் வணிக அலுவலகங்கள் என அனைத்து இடத்திற்கும் பொருத்தமானதாக இந்த சோபாக்கள் இருக்கும்.

லோ சீட்டட் கௌச்சஸ்

வீட்டின் எந்த அறைக்கும் அழகிய தோற்றத்தைத் தரக்கூடிய இந்த சோபாக்கள் தாழ்வாக அமரும் இருக்கைகளைக் கொண்டவையாகும். சோபா பேஸுடன் இணைக்கப்பட்ட வசதியான குறைந்த பின் இருக்கை, குஷன் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.லிவ்விங் ரூமில் ஜன்னல்களை ஒட்டி இவற்றை அமைக்கும் பொழுது இவை அமர்வதற்கு மிகவும் வசதியாக இருக்கின்றன.

மேலும் செய்திகள்