< Back
உங்கள் முகவரி
வசிப்பிடங்களில் இத்தனை வகைகளா?
உங்கள் முகவரி

வசிப்பிடங்களில் இத்தனை வகைகளா?

தினத்தந்தி
|
2 Jun 2023 5:16 PM IST

அரண்மனைகள் ஆடம்பரமான தங்கும் மற்றும் உணவு விடுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. சில அரண்மனைகள் சுற்றுலா தலமாகவும் உள்ளது.

1. அரண்மனைகள்: - இந்தியாவில் ஆடம்பரமான, பாரம்பரியமிக்க கலாச்சாரத்துடன் இணைந்த வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள். இந்தியாவின் பல இடங்களில் அற்புதமான அரண்மனைகள் கட்டப்பட்டு கட்டட கலைக்கு சாட்சியாக உள்ளது. பண்டைய காலத்தில் அரசர்களும் அரசிகளும் நேர்த்தியான ஆடம்பரமான பல வகையான வசதிகளுடன் வாழ்ந்த அரண்மனைகள் அன்றைய கட்டிட வல்லுநர்களின் திறமையை நினைத்து நம்மை பிரமிக்க வைக்கிறது. இன்று அந்த அரண்மனைகள் ஆடம்பரமான தங்கும் மற்றும் உணவு விடுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. சில அரண்மனைகள் சுற்றுலா தலமாகவும் உள்ளது.

2 . மாளிகைகள் (பங்களா):- பெரும்பாலும் நகர்புறங்களில் மாளிகைகள் நேர்த்தியான திறமையான கட்டிட வல்லுனர்களால் தோட்டம், நடந்து செல்லும் பாதை, கார் போன்ற வாகனங்களை விடுவதற்கான இடங்கள் என்று பல இன்றைய நவீன காலத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது. இந்தியாவில் சிறு குடும்பங்கள் கூட சதுர அடி கணக்கில் இம்மாதிரி பங்களாக்களை இன்றைய தேவைக்கு ஏற்ப கட்டுகின்றனர். அவரவர் குடும்ப சூழலுக்கு ஏற்பவும் பங்களாக்கள் கட்டப்படுகிறது.

3. பண்ணை வீடுகள்:- பண்டைய காலங்களில் மிகப்பெரிய செல்வந்தர்கள் தங்களுக்கு என பண்ணை வீடுகள் வைத்திருந்தனர். வீட்டை சுத்தி பல வகையான மரங்கள் தோட்டங்கள் அமைத்து அமைதியான முறையில் காற்றோட்டமான வசதியுடன் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்றைய கால கட்டத்திலும் பண்ணை வீடுகளை மக்கள் அவ்வப்போது சென்று தங்கவும் ஓய்வெடுக்கவும் வசதியாக வைத்துள்ளார்கள். பண்ணை வீடுகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், மலைப்பிரதேசங்களிலும், கடலோரங்களிலும், வயல் சார்ந்த இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

4. அடுக்குமாடி கட்டிடங்கள்:- நகர்ப்புறங்களில் பொதுவாக அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகம் காணப்படுகிறது. சிறு சிறு தனி குடும்பமாக வாழும் மக்கள் இது போன்ற அடுக்குமாடி வீடுகளில் வசிக்கின்றனர். ஒன்று இரண்டு மூன்று மற்றும் நான்கு படுக்கை அறைகள் கொண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் அயல்நாடுகளிலும் இந்தியாவில் பெரும்பாலும் நகரங்களிலும் மட்டுமே அமைந்துள்ளது.

5. வில்லா:- வில்லாக்கள் பெரிய செல்வந்தர்களால் தங்களுக்கு என்று ஆடம்பரங்களுடன் அனைத்து வசதிகளும் உள்ளடங்கியதாக கட்டப்பட்டிருக்கும். வீட்டுக்கு உள்ளேயே நடப்பாதை வசதிகள்,நீச்சல் குளம், புல்வெளிகள், தோட்டங்கள் என்ற அனைத்து வசதிகளும் இருக்கும்.தாராளமான இடவசதிகளுடன் காற்றோட்ட வசதிகளுடன் கட்டப்படுகின்றன. ஆனால் இன்றைய காலக்கட்டங்களில் இட வசதிக்கு ஏற்றப்படி சிறு சிறு வில்லாக்கள் கூட மேற்கூறிய பல வசதிகள் இணைக்கப்பட்டு கட்டப்படுகின்றன.

6. குடிசை வீடுகள்: - அன்றைய காலத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் வீடு குடிசை. அருகில் உள்ள சிறு மரங்கள், மரத்துண்டுகள் , தென்னங்கீற்றுகள், இலைகள் இவைகளை கொண்டு உருவாக்கப்பட்டது. குடிசைகள், களிமண், செங்கல்கள், துணிகளை கொண்டு அவசரமாக தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. குடிசை வீடுகள் சிறியதாக இருந்தாலும் எந்த சீதோஷனங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும். இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட குடிசை வீடுகள் அரிதாகி வருகின்றன.

7.காண்டோமினியம்:-காண்டோமினியம் என்பது ஒரு கட்டிட வளாகம். இதில் தனித்தனியாக பல சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் வசதிகளுடன் இருக்கும். இதில் விளையாட்டறைகள் பொதுவான அறைகள் பூங்காக்கள் என அத்தனை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் இந்த வசதிகளை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த பொறுப்புகளை ஒரு சங்கம் நிர்வகிக்கும்.

8. பென்ட் ஹவுஸ்:-பென்ட் ஹவுஸ் என்பது பல அடுக்குமாடி கட்டிடங்களின் ஒரு வகை. அடுக்கு மாடி கட்டிடத்திலேயே இரண்டு தளங்கள் கொண்டதாக இருப்பதை பென்ட்ஹவுஸ் என்று அழைப்பர். பல ஆடம்பர வசதிகளை உள்ளடக்கியது இது . மற்ற அடுக்குமாடி வீடுகளில் இருந்து வேறுபட்டிருக்கும். விலை உயர்ந்தவை. ஆடம்பர வாழ்க்கையின் அம்சமாக இது இருக்கும்.

9. ஸ்டுடியோ கட்டமைப்புகள்: - இது மற்ற வீடுகளைப் போன்று அடுக்குமாடி அமைப்புகளே. படுக்கையறை, சமையலறை என்று தனித்தனி அறைகள் இல்லாமல் பெரிய அறையை கொண்டவை ஸ்டூடியோ அபார்ட்மென்ட் என்று அழைக்கப்படும்.. திருமணம் ஆகாத இளைஞர்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.

10. பசுமை வீடுகள்: பசுமை வீடுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உகந்த கட்டுமான பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் புதிய முயற்சிகள் மக்களால் எடுக்கப்படுகிறது. சுற்று சூழலுக்கு ஊரு விளைவிக்காத கட்டுமானப் பொருட்கள், சூரிய சக்தி மின்சாரம், மாடித்தொட்டம், சிறு இடத்தில கூட செடிகள் மரங்கள் வளர்ப்பது போன்றவைகளை கொண்டது பசுமை வீடுகள். வருங்கால சந்ததியினரின் நன்மையை காக்கும் பசுமை வீடுகள் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

மேலும் செய்திகள்