< Back
உங்கள் முகவரி
கட்டுமானத்தில் மட்ஜாக்கிங் முறை
உங்கள் முகவரி

கட்டுமானத்தில் மட்ஜாக்கிங் முறை

தினத்தந்தி
|
24 May 2023 10:54 AM IST

கான்கிரீட் ஸ்லேப் கொண்டு அமைக்கப்படும் தரைகள், நடைபாதைகள், வீட்டின் கார் நிறுத்தும் போர்டிகோ போன்ற இடங்களில் கான்கிரீட் ஸ்லேப் தொய்வடைந்து பள்ளமாக தரையில் இறங்கி விடும் நிலையை சரி செய்ய உபயோகப்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமே மட்ஜாக்கிங்.

தொய்வு பெற்ற கான்கிரீட் ஸ்லாப்பை தூக்கி நிறுத்தும் தொழில்நுட்பம் என்று இதை கூறலாம். கான்கிரீட் கொண்டு போடப்படும் ஸ்லாப்புகள் செட் ஆவதற்கு முன்பாகவோ அல்லது செட்டாகி சில வருடங்கள் கழித்தோ தொய்வடைந்து அல்லது உடைந்து உள்நோக்கி குவியும் பொழுது, அதன் அருகாமையில் துளை மூலம் மண் குழம்பை அனுப்பி தொய்வை சரி செய்யும் முறை தான் மட்ஜாக்கிங். கான்கிரீட் சாலைகள், நடைபாதைகள் மற்றும் போர்டிகோ போன்ற இடங்களில் ஏற்படும் இந்த கான்கிரீட் தொய்வை மட்ஜாக்கிங் மூலம் சரி செய்து பழைய நிலைக்கு அதை உயர்த்தி விடலாம்.

கட்டுமானத்தில் மட்ஜாக்கிங் முறை

கான்கிரீட் ஸ்லேப் அல்லது பாதையை முழுவதுமாக எடுத்துவிட்டு புதிதாக போடுவதற்கான பொருளாதார வசதியோ நேரமோ இல்லாத நிலைகளில் மட்ஜாக்கிங் பயனளிக்கிறது. இந்த முறையில் உடைந்து அல்லது தொய்வடைந்த கான்கிரீட் தளத்திற்கு அருகாமையில் சில துளைகள் அதாவது 1.5 அங்குலம் முதல் 2.5 அங்குலம் வரையிலான விட்டம் கொண்ட துளைகள் அமைத்து அதன் உள் சிமெண்ட் மணல் மற்றும் தண்ணீர் கலந்த கலவையை ஒரு ஹோஸ் மூலம் மோட்டார் கொண்டு பம்ப் செய்து, துளைகளின் மூலம் தரையில் கான்கிரீட் ஸ்லாபின் அடிப்புறத்திற்கு அனுப்பப்படுகிறது.

இந்த குழம்பு தரையில் நிரம்ப நிரம்ப தொய்வடைந்த கான்கிரீட் ஸ்லாப் மேல் எழும்பி பழைய நிலைக்கு வந்துவிடும். இந்த குழம்பு செட்டாகி கடினமான பிறகு அது முழு வலிமையை அந்த கான்கிரீட் ஸ்லாவிற்கு வழங்குகிறது. மட்ஜாக்கிங் என்பது தொய்வடைந்த கான்கிரட்டை சரிப்படுத்துவதற்கே அல்லாமல் கான்கிரீட் தொய்வடைந்ததற்கான காரணத்தை சரி செய்யும் ஒரு தீர்வு அல்ல. எதனால் தொய்வடைந்தது என்பதை கண்டுபிடித்து அதை சரி செய்வதே நிரந்தர தீர்வளிக்கும். கான்கிரீட் தளம் நல்ல வலிமையாக இருந்து பூமியின் மண் சரிவினால் தொய்வடைந்து இருந்தால், பிரச்சனையை மட்ஜாக்கிங் முழுமையாக தீர்த்துவிடும்.

மட்ஜாக்கிங் முறையில் இந்த பராமரிப்பு செய்வது சிக்கனமானதாக இருக்கிறது இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் சுலபமாக செய்யக் கூடியதாகவும் குறைந்த நேரத்தில் முடிக்க கூடியதாகவும் பெரிய அதிநவீன கருவிகள் ஏதும் தேவையற்றதாகவும் இருக்கிறது. கான்கிரீட் ஸ்லாபின் மேற்புறம் டைல்கள் ஒட்டப்பட்டு இருந்தால் இந்த மட்ஜாகிங் முறை பயன் அளிக்காது.

மேலும் செய்திகள்