வீட்டிற்குள் பசுமையை வரவேற்போம்
|இன்றைய காலகட்டத்தில் மக்கள் வாழும் இடம் என்பது சுருங்கிக் கொண்டே போகின்றது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாழ்க்கை நடத்துவதற்கான செலவு என்பதும் பெருகிக் கொண்டே போவதால் நாம் வாழும் இடம் என்பது சுருங்கிக் கொண்டு வருகின்றது என்றும் சொல்லலாம். ஒரு அறையுடன் கூடிய சமையலறை, ஒரு படுக்கையறை வரவேற்பறை மற்றும் சமையலறை போன்றவை இன்றைய காலகட்டத்தில் மக்களால் அதிகம் வசிக்கக்கூடிய இடமாக மாறிவிட்டது.
செடிகள் வளர்ப்பதற்கு ஆசையிருந்தாலும் இது போன்ற சிறிய வீடுகளில் செடிகளை எப்படி வளர்க்க முடியும் என்று கவலைப் படுபவர்களுக்கு அவர்களின் கவலையை மாற்றி மகிழ்ச்சியைத் தருவதற்காக வந்திருப்பவையே டேபிள்டாப் டெஸ்ட் டியூப் பிளான்டர் மற்றும் மேக்னெட்டிக் பூந்தொட்டிகள்.
டேபிள்டாப் டெஸ்ட் டியூப் பிளான்டர்
அறிவியல் கூடங்களில் உபயோகப்படுத்தக்கூடிய சிறிய அளவிலான டெஸ்ட் டியூப்களில் செடிகளை வளர்ப்பது இப்பொழுது பிரபலமாகி வருகின்றது. இந்த சிறிய அளவிலான டெஸ்ட் டியூப்கள் அழகிய மரத்தினால் செய்யப்பட்ட சிறிய ஸ்டாண்டில் மிகவும் அழகாக வைக்கப்பட்டு அதில் குறிப்பிட்ட செடிகளை நீருக்குள் வைத்து வளர்ப்பது போல் வடிவமைத்திருக்கிறார்கள்.இந்த பசுமையான சிறு செடிகள் உங்களது மேசைகளை அலங்கரிப்பதுடன் அதைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புத்துணர்ச்சியான உணர்வைத் தரும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.இவற்றை ஜன்னல்கள், மேன்டில்கள், வெற்று அலமாரிகள் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம்.
பிளான்டர் என்பது சிறிய தாவரங்கள் அல்லது பூக்களை வைப்பதற்காக செய்யப்பட்ட கைவினைப் பொருளான அலங்காரத்தொட்டி என்று சொல்லலாம்.இந்த பிளான்டர்களில் வைக்கப்படும் செடிகள் அந்த இடத்தையே மிகவும் அழகாகவும் பளிச்சென்றும் காட்டுகின்றது.மாமரத்து பலகைகளில் செய்யப்பட்ட ஸ்டாண்டில் போரோசிலிகேட் கண்ணாடி குழாய்களைச் செருகி வைத்து செடிகளை வளர்ப்பது போல் இந்த டேபிள்டாப் டெஸ்ட் டியூப் பிளான்டர்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரே ஸ்டாண்டில் அதிகபட்சம் ஐந்து செடிகள் வைத்து வளர்ப்பது போல் டெஸ்ட் டியூப் பிளான்டர் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டெஸ்ட் ட்யூப்களின் நீளம் 16.5 சென்டி மீட்டரும், அகலம் 4.5 சென்டி மீட்டரும், உயரம் ஒன்பது சென்டிமீட்டர் முதல் நான்கு சென்டிமீட்டர் வரையிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்படுகின்றன.அறுபது மில்லி லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டவையாக இந்த டெஸ்ட் டியூப்கள் உள்ளன.இவற்றை சுத்தம் செய்வதற்கு ஒரு பிரஷ் இவற்றுடன் வருகின்றது.இதுபோன்ற பிளான்டர்களில் வைக்கக்கூடிய செடிகளை ஆராய்ந்து அவற்றை வைக்கலாம்.
இந்த ஸ்டாண்டுகள் பெரும்பாலும் மரப்பலகையின் இயற்கையான வண்ணத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்படுகிறது.இயற்கையை ரசிப்பவர்கள் இவற்றைக் கட்டாயம் விரும்புவார்கள். நம் வீட்டில் நம்முடைய மேசையை அலங்காரம் செய்யக்கூடிய இந்த பிளான்டர்களை மற்றவர்களுக்கும் பரிசளிக்கலாம்.குறிப்பாக மேசைகளில் வைத்து தாவரங்களை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இவற்றில் போத்தோஸ், சின்கோனியம், அக்லோனெமா,வான்டரிங் ஜ்யூ,மான்ஸ்டெரா டெலிசியோசா, பைலியா, ZZ பிளான்ட்,ஸ்பைடர் பிளான்ட்,கோலியஸ், மராண்டா, சான்செவிரியா, பிடில் இலை அத்தி போன்றவற்றை தண்ணீர் நிரப்பி வளர்க்கலாம்.
சிறப்புகள்
நூறு சதவிகிதம் இந்தியாவிலேயே கைகளால் தயாரிக்கக்கூடிய கைவினைப் பொருளாகும். மிகவும் உயர்தர மா மரப்பலகைகளால் இவை வடிவமைக்கப்படுகின்றன. பரிசளிப்பதற்கு உகந்தது.மரமும், கண்ணாடியும் இணைந்து வரும் இந்த அழகிய தொட்டி மிகவும் நவீனமாகவும் ஸ்டைலாகவும் உள்ளது.குறைந்தபட்சம் ஒற்றை பிளான்டர் முதல் அதிகபட்சம் ஐந்து பிளான்டர்கள் வரை கிடைக்கின்றன.
மேக்னெட்டிக் பூந்தொட்டிகள்
வீட்டின் உட்புறம் பூந்தொட்டிகளை வைத்து செடிகளை வளர்க்க முடியாதவர்களுக்கும், வீட்டின் உட்புற அலங்காரத்தை வித்தியாசமாக செய்ய விரும்புபவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்திருப்பவை இவை என்று சொல்லலாம்.இந்த தொட்டிகளில் ஹைட்ரோபோனிக் முறையில் தாவரங்களை வளர்க்கலாம் (மண்ணின்றி தாவரங்களை வளர்ப்பது என்று பொருள்).இந்த தொட்டிகளில் நமக்குப் பிடித்த செடிகளை வைத்து தண்ணீர் ஊற்றி அந்தத் தொட்டியை அப்படியே இரும்பினால் செய்யப்பட்ட குளிர்சாதனப் பெட்டி, அலமாரி,இரும்பு ஜன்னல் கம்பிகள் போன்றவற்றின் மேல் ஒட்டவைத்து அழகு பார்க்கலாம்.இந்த தொட்டிகளில் பயன்படுத்தப்படும் ஹெவி-டூட்டி காந்தங்களின் சூப்பர்-ஸ்ட்ராங் பிசின் விசையானது தண்ணீரையும் தாவரங்களையும் வைத்திருக்க அனுமதிக்கிறது.இந்த தொட்டிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் செராமிக் அதிக தரம் வாய்ந்தவையாக இருக்கின்றது. கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்படும் இந்தத் தொட்டியில் வருகின்ற எத்தனையோ விதமான டிசைன்களும் வண்ணங்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.கைகளால் வண்ணம் தீட்டப்படும் இந்த தொட்டிகள் பார்ப்பவர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் விதமாக உள்ளன.எந்தவிதமான ஈயம்,காட்மியம்,நச்சு அதிர்வுகளும் இல்லாமல் இவை தயாரிக்கப்படுவது மற்றொரு சிறப்பம்சமாகும்.இவற்றை சுத்தம் செய்வதற்கு ஒரு பிரஷ் இவற்றுடன் வருகின்றது.
1. போத்தோஸ், சின்கோனியம், ஸ்டிரிங் ஆஃப் ஹார்ட்ஸ், மான்ஸ்டெரா, அக்லோனெமா போன்ற நீரில் வேரூன்றக்கூடிய தாவரங்களை இவற்றில் வளர்க்கலாம்.
2. ஒவ்வொரு ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு ஒரு முறை இதில் இருக்கும் தண்ணீரை மாற்ற வேண்டும்.
3. குளிர்சாதனப்பெட்டியில் இவற்றை ஒட்டும் பொழுது அவை வைக்கப்பட்டிருக்கும் இடத்தை பசுமையாகவும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் விதத்திலும் மாற்றுகின்றன.
4. உங்களுக்குப் பிடித்த தாவரங்களை வளர்ப்பதற்கு ஒரு புதுமையான வழி இது.
5. நம்முடைய பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் பரிசளிப்பவர்களுக்கும் பயன்பாட்டைத் தரக்கூடியவையாக இவை இருக்கும்.
6. இந்த மேக்னடிக் பிளான்டர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை உங்களுக்குப் பிடித்த செடிகளுடன் ஒட்டுவதன் மூலம், உங்கள் சலிப்பான பழைய குளிர்சாதனப்பெட்டியை ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்துடன் பார்க்கத் தூண்டும் ஒன்றாக மாற்றலாம்.