< Back
உங்கள் முகவரி
நமது வீட்டையும் பசுமை கட்டமைப்பாக மாற்றுவோம்..!
உங்கள் முகவரி

நமது வீட்டையும் பசுமை கட்டமைப்பாக மாற்றுவோம்..!

தினத்தந்தி
|
26 Aug 2023 12:23 PM IST

காலநிலை மாற்றம் (Climate change) காரணமாக புவி வெப்பமடைதல் என்பது பற்றி சுற்றுச்சூழல் நிபுணர்கள் அக்கறை கொள்ளும் இந்த தருணத்தில், கட்டுமானத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீன யுக்திகள் பற்றி உலக அளவிலான வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

கட்டி முடிக்கப்பட்ட கட்டமைப்புகளிலிருந்து வெளியேறும் கார்பன் போன்ற வாயுக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாவதால் அதற்கான தீர்வுகளும், வழிகாட்டு நெறிகளும் இப்போது அளிக்கப்பட்டுள்ளன.

கட்டிடத்தின் வரைபடம் தொடங்கி கட்டி முடித்து வீட்டில் குடியேறுவது வரை, சகல விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு அமைக்கப்படுவதை பசுமை வீடு எனலாம். காற்றோட்டம், சூரிய வெளிச்சம் வரும் வழிகள், காற்று வீசும் திசை பார்த்த ஜன்னல்கள் அமைப்பு, குறைவான தண்ணீர் மற்றும் மின்சாரம் பயன்பாடு ஆகிய பயன்பாடுகளின் அடிப்படையில் பசுமை வீடுகள் உருவாக்கப்படுகின்றன. எவ்வகையான உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி அவற்றை அமைக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன.

பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் அனைத்து வித உள்கட்டமைப்பு வசதிகளும் அரசால் செய்யப்படுகின்றன. கட்டுமானத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. அது தொழில்துறைக்கு சிறப்பு என்றாலும், இன்னொரு பக்கம் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதை கவனிக்க வேண்டி உள்ளது.

வீடுகள் உள்ளிட்ட மற்ற கட்டிடங்களை வடிவமைக்க பயன்படுத்தும் கட்டுமான பொருட்களின் உபயோகம், அவை சுற்றுசூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்ற தகவல்கள் தொழில்நுட்ப வல்லுநர்களால் தரப்பட்டிருக்கின்றன. கட்டுமான துறையினர் நீண்ட காலத்துக்கு பாதுகாப்பாக உழைக்கும் பொருட்களை உபயோகிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மூலப் பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்ற அவசியம் உலக அளவில் வலியுறுத்தப்படுகிறது.

இயற்கையான வெளிச்சம் வீட்டிற்குள் வரவும், நல்ல காற்றோட்ட வசதிக்காக மற்றும் வீட்டுக்குள் வரக்கூடிய வெப்பம் தக்க முறையில் வெளியேறக்கூடிய ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அமைப்புகள் ஆகியவையும் பசுமை வீட்டுக்கான அடிப்படையாகும். மேலும், சுவாசிக்க தேவைப்படும் சுத்தமான காற்றோட்டம் வீட்டுக்குள் இருப்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

பல வீடுகளில் குழந்தைகள் தண்ணீர் குழாய்களை திறந்து வைத்துவிட்டு பல் துலக்குவதில் ஈடுபடுகிறார்கள். அல்லது குழாயை திறந்து விட்டு விளையாடிக்கொண்டிருப்பார்கள். அதுபோன்ற சமயங்களில் விரயமாகும் நீரின் அளவு பற்றி பெரியவர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.

வீடுகளில் அன்றாடம் வெளியில் கொட்டப்படும் சமையலறை கழிவு பொருட்களான டீ மற்றும் காபி ஆகியவற்றை வடித்து எஞ்சிய தூள், காய்கறிகளின் உபயோகமற்ற பகுதிகள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை வீட்டு செடிகளுக்கான உரமாக மாற்றி பயன்படுத்தலாம். தோட்டப்பகுதியில் எடுக்கப்பட்ட சிறிய குழியில் அவற்றை போட்டு மண்ணால் மூடி வைத்து, ஓரிரு மாதங்கள் கழித்து அவற்றை எடுத்து உரமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீண்ட காலமாக கழிவறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பிளஷ் அமைப்புகள் கண்டிப்பாக தண்ணீரை அதிக அளவில் வெளியேற்றக் கூடியதாக இருக்கும். அத்தகைய பழைய முறைகளுக்கு மாற்றாக நீரின் அளவு குறைவாக பிளஷ் செய்யக்கூடிய நவீன மாடல்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதோடு, பழைய ஷவர் ஹெட் அமைப்புகளையும் மாற்றுவது நல்லது.

கட்டிடங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்புற பெயிண்டிங்கை மாற்றி அமைக்க வேண்டும். அவ்வாறு வெளிப்பூச்சு வேலைகள் செய்யும்போது குறைந்த அளவு வி.ஓ.சி (வோலாட்டில் ஆர்கானிக் காம்பவுண்டு) கொண்ட பெயிண்டுகள் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் வீடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ரசாயன பாதிப்புகளை தடுக்க இயலும்.

மேலும் செய்திகள்