நிலையை உயர வைக்கும் தலைவாசல் அமைப்பு
|உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அவர்களது பண்பாட்டு ரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் வீடுகளை வடிவமைப்பு செய்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கட்டிடவியல் மற்றும் அறிவியல் நெறிமுறைகளை உள்ளடக்கியதாக வாஸ்து சாஸ்திர விதிகள் வரையறை செய்யப்பட்டு வருகின்றன.
வாஸ்து சாஸ்திர ரீதியாக வீடுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளின் தலைவாசலை அமைப்பது பெரும்பாலான மக்களின் வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள், அவர்களது லக்ன ரீதியான தலைவாசலை அமைக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள்.
வாஸ்து சாஸ்திரம், சிற்ப நூல், மனையடி சாஸ்திரம் போன்ற கட்டிடங்களை அமைக்கும் மரபு வழி நடைமுறைகள் பற்றி விளக்கும் நூல்கள், ஒரு வீட்டுக்கு தலைவாசல் எந்த திசையை நோக்கியவாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டுள்ளன. அதற்கு, மனை அல்லது வீட்டு உரிமையாளரின் பிறப்பு இலக்கினம் கணக்கில் கொள்ளப்படுகிறது.
லக்னம் என்பது பூமியை மையமாக கொண்டு சுற்றிலும் உள்ள வான் மண்டலத்தை 30 டிகிரி அளவு கொண்ட 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 12 ராசிகளாக உள்ளது. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தன்னைத்தானே சுற்றுவதால், சுமார் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றன. ஒருவர் பிறக்கும் சமயத்தில் அடிவானில் உள்ள ராசியே அவரது லக்னம் என்று சொல்லப்படும். அந்த லக்னத்திற்கேற்ப வீடுகளின் தலைவாசலை அமைத்தால் பல நன்மைகளை அடைய இயலும் என்பது வாஸ்து ரீதியான நம்பிக்கை.
ஒருவர் பிறந்த லக்னத்தின் அடிப்படையில் நான்கு திசைகளில் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீட்டின் தலைவாசலை அமைத்துக் கொள்வது சிறப்பு என்பது நம்பிக்கை. அதன் விபரம் :-
மேஷம், சிம்மம், தனுசு லக்னம் - கிழக்கு தலைவாசல்.
கடகம், விருச்சிகம், மீனம் லக்னம் - வடக்கு தலைவாசல்.
மிதுனம், துலாம், கும்பம் லக்னம் - மேற்கு தலைவாசல்.
ரிசபம், கன்னி, மகரம் லக்னம் - தெற்கு தலைவாசல்.
நகரப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவை வெவ்வேறு திசைகளில், பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் இருப்பதால் வாஸ்து சாஸ்திர வழிகளை பின்பற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. மக்கள்தொகை பெருக்கம் காரணமாக இடப்பற்றாக்குறை உள்ள நிலையில் கிடைக்கும் மனையில் கட்டிடத்தை அமைப்பதே நகர்ப்புற வாழ்வு முறையாக உள்ளது.
அதனால், காலத்தின் மாற்றத்திற்கேற்பவும், தற்கால நடைமுறைகளை ஒட்டியும் வாஸ்து வல்லுனர்கள் பல வழிகளை வரையறை செய்துள்ளார்கள். அதன்படி செயல்பட்டு சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு வீடுகளை அமைத்துக்கொள்ளலாம்.
கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் ஒரே தலைவாசல் அமையலாம். ஆனால், மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் ஒரே தலைவாசல் இருப்பது நல்ல விளைவுகளை அளிப்பதில்லை என்பது அறியப்பட்டுள்ளது. அதனால், மேற்கு தலைவாசலுக்கு எதிராக கிழக்கு திசையில் இன்னொரு வாசலும், தெற்கு தலைவாசலுக்கு எதிராக வடக்கு திசையில் இன்னொரு வாசலும் அமைப்பது அவசியம்.
ஒருவரது லக்ன ரீதியாக தலைவாசல் அமைக்கும் விதத்தில் வீடு அல்லது வீட்டுமனை அமையாத நிலையில் என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அவர்கள் கிடைத்த மனை அல்லது வீட்டை வாஸ்து சாஸ்திர ரீதியாக அமைக்க இயலும். அதாவது, தலைவாசலை அந்தந்த திசைகளுக்கான உச்சப் பகுதியில் அமைத்துக்கொள்ளலாம்.
சீரற்ற அமைப்பும், அளவுகளும் கொண்ட வீட்டுமனைகளையும் வாஸ்து ரீதியாக கச்சிதமான வடிவம் கொண்டதாக மாற்றம் செய்து, அங்கு கட்டப்படும் வீட்டுக்கு உச்ச திசையில் தலைவாசலை அமைத்துக்கொள்ளலாம்.