கட்டுமானத்திற்கு பயன்படும் கார்பன் பைபர்
|கட்டுமானத்துறையின் ஆராய்ச்சியின் விளைவாக கடந்த சில வருடங்களாக பல புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்துள்ளன. அதில் குறிப்பாக பல புதிய கட்டுமான பொருட்கள் மிகவும் சிறந்ததாகவும் தாங்குதிறன் உள்ளதாகவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்றுதான் கார்பன் பைபர்.
இந்த கார்பன் பைபர் வலிமை நீடித்து உழைக்கும் தன்மை நெகிழ்வுத் தன்மை போன்றவைகள் நிறைந்ததாக உள்ளதால் கட்டுமானத்திற்கு பெருமளவில் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கார்பன் பைபர் அடர்த்தித்தன்மை குறைவாகவும் எடை குறைவாகவும் அதே நேரத்தில் வலிமை அதிகமானதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கார்பன் பைபர் என்பது நீளமான மெல்லிய கார்பன் அணுக்களால் ஆன பாலிமர் என்பதாகும். இது கிறிஸ்டல் வடிவத்தில் இருப்பது. இது இரும்பை விட ஐந்து மடங்கு வலு உள்ளதாகவும், எடை மிகவும் குறைவானதாகவும், விறைப்பு தன்மையில் இரு மடங்கு உறுதியானதாகவும் இருக்கிறது. இந்த கார்பன் இழைகளை ஒன்றோடு ஒன்று பின்னி பின்னி அவற்றை ஒரு வடிவத்திற்கு கொண்டு வருகிறார்கள். இந்த வடிவம் தான் கட்டுமானத்துறையில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
கார்பன் பைபரை கட்டுமானத்துக்கு வீடு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு பயன்படுத்துவதற்கான காரணங்கள் கீழ் வருமாறு,
1. இது மிகவும் வலிமையானதும் நீடித்து உழைக்கக் கூடியதும்.
2. இது எடை குறைவானது மற்றும் மனித உழைப்பு குறைவாக தேவைப்படக்கூடியது.
3. வீடுகளுக்கு ஜன்னல்கள், கதவு, வெளிப்புற பட்டி, தூண்கள், வேலிகள் மற்றும் பெர்கோலா அமைப்புகளுக்கு பயன்படுகிறது.
4. அதிக உழைப்பினால் தொய்வடையாமல் இருப்பதும், நெகிழ்வுத் தன்மையுடன் வளைந்து கொடுக்கக் கூடியதாய் இருப்பதும் இதில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்கிறது. கான்கிரீட் மற்றும் இரும்பு போன்றவை போல இதில் விரிசல்கள் ஏற்படுவதில்லை. எனவே எடை தாங்கக் கூடியதாய் இருக்கிறது.
5. இது அதிகமான அழுத்தத்தை தாங்க கூடியதாய் இருப்பதால் எவ்வளவு அழுத்தத்தையும் கட்டுமானத்தில் இது தாங்கி நிற்கிறது.
6. கார்பன் பைபர் ஈரப்பதம், மழை, கதிர்வீச்சு மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றை எதிர்க்கக் கூடியதாய் இருப்பதால் எல்லாவிதமான சீதோசன நிலைகளுக்கும் உகந்ததாக இருக்கிறது.
7. கார்பன் ஃபைபர் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது
1. பொதுவாக ப்ரீ -காஸ்ட் கான்கிரீட் கட்டுமானத்தில் பொதுவாக உபயோகப்படுத்தப்படும் இரும்பு ஷீட்டுகள் மற்றும் கிரிட்களுக்கு பதில் கார்பன் ஃபைபர் உபயோகப்படுத்தப்படுகிறது.
2. சாண்ட்விச் வால் பேனல்களில் கார்பன் ஃபைபர் கிரிட் மற்றும் ட்ரஸ் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் அஸ்பஸ்டாஸ் ஷீட்டுக்கு பதில் கார்பன் ஃபைபர் உபயோகப்படுத்துவதால் காற்றோட்டம் நன்றாக இருக்கிறது. வெளிப்புற கட்டுமான பகுதிகளான கான்கிரீட் தூண்கள் போன்றவற்றில் கார்பன் பைபர் பெரும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.
3. இது நேரத்தையும் செலவையும் குறைக்க கூடியதாய் இருக்கிறது. பாலங்கள் கட்டும் பொழுது பொதுவாக கான்கிரீட் உபயோகத்தில் ஸ்டீல் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் தற்காலங்களில் இந்த இடங்களில் கார்பன் ஃபைபர் இரும்பிற்கு பதிலாக உபயோகப்படுத்தப்படுவதால் அது நீடித்த ஆயுளும் சீதோஷ்ண நிலையை தாங்க கூடியதாகவும், துருபிடிக்காததாகவும், ஈரப்பதத்தை தாங்க கூடியதாகவும் மற்றும் ரசாயன மாற்றங்களை எதிர்க்கக் கூடியதாகவும் இருக்கிறது.
4. பழைய கட்டுமானங்களை ரிப்பேர் செய்யும் பொழுது அங்கு இரும்பு கம்பிகள் போன்றவற்றிற்கு பதிலாக கார்பன் ஃபைபர் உபயோகப்படுத்தப்படுகிறது.
5. எஃப்ஆர்பி லேமினேட் என்ற பொருளை கட்டுமான வடிவங்களில் ரெசின் கொண்டு பதிக்கப்பட்டு பழுது பார்க்கப்படுகிறது. இதனால் பீம் மற்றும் ஸ்லாப்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது.
கார்பன் ஃபைபர் கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப்படுவதில் ஒரே ஒரு பாதகமான விஷயம் என்பது அதனுடைய விலை இரும்பு மற்றும் அலுமினியத்துடன் ஒப்பிடுகையில் சற்றே கூடுதலாக இருக்கிறது என்பது மட்டுமே. ஆனால் இரும்பு மற்றும் அலுமினியம் உபயோகப்படுத்தப்படும் பொழுது மனித உழைப்பு அதிகம் தேவைப்படுவதால் ஆட்கூலிகளை கணக்கிடும்பொழுது கார்பன் ஃபைபர் பயன்படுத்துவது சிக்கனமானது என்றும் கூறலாம்.
கார்பன் ஃபைபர்களின் மக்கக்கூடியதாகவும் மறுசுழற்சி செய்யக்கூடியதாகவும் இருப்பதால் இதை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்று குறிப்பிட முடிகிறது. கார்பன் பைபர் உபயோகித்து கட்டப்பட்ட மிக முக்கியமான புகழ்பெற்ற கட்டிடங்கள் என்று பார்க்கையில் ட்ரெஸ்ட்டன் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி ஜெர்மனி, வளாகத்தில் உள்ள கார்பன் ஹாஸ் என்பதே உலகில் முதல் முதலில் கார்பன் பைபர் உபயோகப்படுத்தப்பட்டு கட்டப்பட்ட கட்டிடமாகும்.