கன்னியாகுமரி
மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டம்
|குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இந்த ஓட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், தமிழக அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைகிறதா? என்பது குறித்தும், திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் அறிந்துக்கொள்ள தகவல் அறியும் உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அமைப்பு சாரா சங்கங்கள், ஓய்வூதியர்கள், பல்வேறு வகையான பட்டாக்கள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு சட்ட உதவி தகவல்கள் பொதுமக்களிடையே சென்றடையவில்லை. எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டம் நடைபெறுகிறது என்றார்.
இந்த விழிப்புணர்வு ஓட்டமானது கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டு கோர்ட்டு ரோடு வழியாக வேப்பமூடு பூங்கா வரை சென்றது. இதில் தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், கோணம் அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் சத்தியகுமார், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், குற்றவியல் மேலாளர் சுப்பிரமணியன், நீதியியல் மேலாளர் ஜூல்யன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.