< Back
ஆன்மிகம்
ஐம்புலன்களையும் ஒருநிலைப்படுத்தும் வழிபாடு
ஆன்மிகம்

ஐம்புலன்களையும் ஒருநிலைப்படுத்தும் வழிபாடு

தினத்தந்தி
|
24 May 2022 10:27 AM GMT

ஆலய கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு, அலங்காரம் முடியும் வரை திரை யிடப்படும். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணி அடிக்கப்பட்டு, தீபாராதனை காட்டுவார்கள். இப்படி மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன ? என்பது பற்றி, ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்..

"வழிபாட்டின் போது நம்மனம் பக்தியில் நிலைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கவனத்தை எங்கோ சிதறவிட்டு விட்டு, இறைவனை வணங்குவதால் எந்த பலனும் இல்லை. மந்திரம் ஜெபிக்கும் போதும், தியானம் செய்யும் போதும் மனம் மந்திரத்திலேயே கருத்தூன்றி இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ , இறை தரிசனத்தின்போதும் மனஒருமைப்பாடு அந்த அளவுக்கு முக்கியமானது.

கோவிலில் வழிபடும் போது, இறைவனைத் தவிரவேறு எந்த எண்ணமும் மனதில் நிழலாடக் கூடாது. ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், உடல் அனைத்தும், நம்மனதை திசை திரும்பும் சக்தி படைத்தவை . அவற்றை இறைவனை நோக்கி திருப்புவதுதான் வழிபாட்டின் நோக்கம் ஆகும். அலங்காரம் முடித்து மூலவர் சன்னிதி முன்புள்ள திரையை விலக்கும்போது, கடவுளின் திருமேனி அழகில் கண்கள் ஈடுபடுகின்றன . கோவிலில் பிற சப்தங்கள் நம் கவனத்தை ஈர்க்காத வகையில், அந்த சப்தங்களை அடக்குவதற்காகவே மணியோசை ஒலிக்கப்படுகிறது.

திரை விலகி, இறை தரிசனத்தைக் கண்டவுடன், நம்முடையவாய் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பூ மாலை , கற்பூர ஆரத்தி, தீபம், தூபம் போன்றவற்றால் வெளிப்படும் தெய்வீக நறுமணம், மற்ற எந்த வாசைனையையும் நுகர விடாமல் மூக்கை தடுக்கிறது. கரங்கள் இரண்டும் குவிந்து இறைவனை வணங்கும்போது, உடல் பணிவுடன் இறைவனின் அருளை வேண்டுகிறது. இப்படி ஐம்புலன்களும் வழிபாட்டில் ஈடுபட்டால்தான் ஒருவரின் மனம் ஒருமுகப்படும். அந்த நிலையில் பக்தனின் உள்ளமும் கூட கோவிலாக மாறும். அதுதான் வழிபாட்டின் தத்துவம்" என்று பதிலளித்தார் காஞ்சி சங்கராச்சாரியார்.

மேலும் செய்திகள்