புண்ணிய பலன்களை தரும் சித்ரகுப்தர் வழிபாடு
|சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சித்திரை மாதத்தில் உச்சம் பெறுபவர், சூரியன். அதேபோல் அந்த மாத பவுர்ணமி அன்று முழுமதியாக திகழ்பவர் சந்திரன். ராஜகிரகங்களான சூரியனும், சந்திரனும் முழு பலத்துடன் இருக்கும் மாதம் என்பதால் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி சிறப்புக்குரியதாக மாறுகிறது. இந்த நாளில் கிரிவலம் வருவது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும். எமதர்மனின் கணக்காளராகவும், பாவ-புண்ணிய கணக்குகளை பாரபட்சம் இன்றி எழுதும் பணியைச் செய்பவருமான சித்ரகுப்தர் அவதரித்த நாள், இந்த சித்ரா பவுர்ணமி. எனவே இந்நாளில் சித்ரகுப்தரை வழிபாடு செய்வதும் நன்மைகளை வாரி வழங்கும்.
ஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய்துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன். அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், 'சித்ரகுப்தன்' என்ற பெயர் வந்தது. 'சித்' என்பது 'மனம்' என்பதையும், 'குப்த' என்பது 'மறைவு' என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களை கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே, தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.
வழிபாடு செய்வது எப்படி?
சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ர குப்தனை மனதார வழிபட வேண்டும்.
சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.
சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து வழிபட வேண்டும்.
பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை, பசித்தோருக்கு தானமாக கொடுத்தால், புண்ணியம் சேரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், முழுமையாக விரதம் மேற்கொண்டு, சித்ரா பவுர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும். சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அதேபோல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சித்ரகுப்தனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று, இந்த ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சிதம்பரம் சித்ரகுப்தர்
'கோவில்' என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோவிலைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக் கோவில் அமைந்திருப்பது போல, சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் சித்ரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது. நடராஜர் ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே சிவகாமி அம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. இதனை 'சிவகாமக் கோட்டம்' என்று அழைப்பார்கள். இதன் வெளிச்சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் சித்திரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த சன்னிதியில், சித்ரகுப்தர் அமர்ந்த நிலையில் கையில் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் சனீஸ்வர பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சித்ரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். எமதர்மனின் கணக்கராக இருந்து, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். எனவே அவர் அவதரித்த நாளில் அவரை வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் குறையும் என்பது நம்பிக்கை. சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்ரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்ரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம்.