கல்விக்கு அதிபதியான கலைமகள் வழிபாடு (4-10-2022 சரஸ்வதி பூஜை)
|வெண் தாமரையில் கையில் வீணையை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாக போற்றி வணங்குகிறோம். வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் இந்த தேவி போற்றப்படுகிறாள். எனவே கல்வியில் சிறந்து விளங்க அனைவரும் கலைவாணியை துதிக்கிறோம். நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்குரியதாகும். அந்த வகையில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ‘ஆயுத பூஜை’ என்றும் சொல்வார்கள்.
கலைமகளின் புகைப்படத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து, அதனை மலர்களால் அலங்கரித்து, நாம் செய்யும் தொழில் சார்ந்த பொருட்களை அன்னையின் முன்பாக வைத்து வழிபாடு செய்தால், அந்த தொழிலில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான் மாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் புத்தகங்களையும், வேலை செய்பவர்கள் தங்களுக்குரிய கருவிகளையும், எழுத்தாளர்கள் பேனாக்களையும் வைத்து வழிபடுவதை வழக்க மாகக் கொண்டுள்ளனர்.
இந்த நாளில் சரஸ்வதி தேவி அருளும் ஆலயங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..
கூத்தனூர் சரஸ்வதி
திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே உள்ள பூந்தோட்டத்தில் சரஸ்வதி ஆலயம் ஒன்று உள்ளது. ஒட்டக்கூத்தர் என்னும் புலவர், கலைமகளை வழிபட நினைத்தார். அதற்காக இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டி வழங்கப்பட்ட ஆலயம் இது. இக்கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா விஜயதசமி. அன்றைய தினம் காலை சரஸ்வதி தேவிக்கு, ருத்ராபிஷேகம் நடைபெறும். பள்ளி மாணவ -மாணவிகள் தோ்வில் வெற்றி பெறவும், பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அந்த குழந்தை படிப்பில் சிறந்த விளங்கவும் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
வாணியம்பாடி சரஸ்வதி
வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது, வாணியம்பாடி. இங்குள்ள அதிதீஸ்வரர் கோவிலில், சரஸ்வதிக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. பிரம்மதேவனின் சாபத்தால் பேசும் தன்மையை இழந்தாள், சரஸ்வதி. அந்த சாபம் நீங்குவதற்காக, இத்தலம் வந்த சரஸ்வதி தேவி, ஆலயத்தில் அருளும் பெரியநாயகி அம்மனையும், அதிதீஸ்வரரையும் வணங்கி சாபம் நீங்கப் பெற்றாள். இறைவனை நினைத்து சரஸ்வதி இசை மீட்டி பாடிய தலம் என்பதால் இந்த ஊருக்கு 'வாணியம்பாடி' என்ற பெயர் வந்தது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை, காலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. கோவிலுக்குள் தனிச் சன்னிதியில் வீணை ஏந்திய வாணி அருள்பாலிக்கிறார்.
வேதாரண்யம் சரஸ்வதி
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அருள்பாலிக்கும் சரஸ்வதிக்கு, வீணை இல்லை. வேதங்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்ட தலம் என்பதால், இதற்கு 'வேதாரண்யம்' என்று பெயர். இத்தல அம்பிகையின் பெயர் 'யாழைப் பழித்த மொழியம்மை' என்பதாகும். இந்த அன்னையின் குரல் யாழை விட இனிமையானது என்பதால் இந்தப் பெயர் வந்தது. மேலும் அன்னையின் குரல் தன்னுடைய யாழை விட இனிமையானதாக இருந்த காரணத்தால், இங்குள்ள சரஸ்வதிதேவி தன்னுடைய கையில் வீணை இல்லாமல் அமர்ந்திருக்கிறார்.